மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் - அரசு ஊழியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அரசு நிர்வாகம் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்வது அனைத்து அரசு ஊழியர்களின் கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பணியாளர்களின் திறன் மேம்பாட்டுக்கான தேசிய திட்டம் (கர்மயோகி) கடந்த 2020 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. கொள்கை கட்டமைப்பு, நிறுவன கட்டமைப்பு, போட்டித் திறன் கட்டமைப்பு, டிஜிட்டல் கற்றல் கட்டமைப்பு, மின்னணு மனித வள மேம்பாட்டு திட்டம், கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் கட்டமைப்பு ஆகிய 6 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் முதலாவது தேசிய பயிற்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பயிற்சி மையங்களில் அதிகாரிகள் பணியமர்த்தப்படுவது அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையாக ஒரு காலத்தில் கருதப்பட்டது. அந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. பயிற்சி மையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மிகச் சிறந்த திறமைசாலிகள், திறன்வாய்ந்த அரசு ஊழியர்களை உருவாக்குபவர்கள் என்ற சூழல் உருவாகியிருக்கிறது.

இந்திய மக்களின் மத்தியில் நமது ராணுவம் மிகுந்த நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது. இதேபோல அரசு நிர்வாகம் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்வது அனைத்து அரசு ஊழியர்களின் கடமை ஆகும்.

அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக பணியாற்ற வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வோடு மக்க ளுக்கு சேவையாற்ற வேண்டும். திட்டங்களை திறம்பட செயல்படுத்த வேண்டும். கர்மயோகி தளத்தில் இதுவரை 10 லட்சத் துக்கு மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

அரசு அதிகாரிகளில் கீழ்நிலை, மேல்நிலை என்ற மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். சாமானிய மக்கள் அளிக்கும் ஆலோசனைகளையும் பரிசீலிக்க வேண்டும். தூய்மை இந்தியா திட்டம், முன்னேற விரும்பும் மாவட்டம், அம்ரித் அணை திட்டம், டிஜிட்டல் இந்தியா திட்டம் ஆகியவை மக்களின் யோசனைகளால் உருப் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

சுயசார்பு இந்தியா திட்டம்: மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த கட்டுரைகள், வீடியோக்களை பிரதமர் நரேந்திர மோடி தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த இணைய இணைப்பை அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

அதில் அவர் கூறும்போது, ‘‘ஊக்கம் குறையாத உறுதியுடன் முன்னோக்கி நடைபோடும் தேசத்துக்கு சேவையாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன். பன்னாட்டு அமைப்புகள் முதல் சுயசார்பு இந்தியா வரை ஒவ்வொரு முயற்சியும் நமது மக்களின் வலிமை மற்றும் உணர்வுக்கு சான்றாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE