மனிதர்களைப் போலவே மிருகங்களுக்கும் உணர்வுகள் உண்டு - மும்பை உயர் நீதிமன்றம் கருத்து

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் போலீஸார் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக எருமை மாடுகளை ஏற்றி வந்த லாரியை மடக்கினர். மாடுகளை கொடுமைப்படுத்தும் வகையில் லாரியில் அடைத்து ஏற்றி வந்ததையடுத்து அந்த மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு கோசாலையில் விடப்பட்டன.

இதையடுத்து எருமை மாடுகளின் உரிமையாளர்கள் சார்பில் வழக்கறிஞர் லைக் ஹுசைன் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில் அந்த மாடுகளை உரிமையாளர்களான தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு கடந்த வாரம் தனி நீதிபதி ஜி.ஏ.சனாப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சனாப் தனது தீர்ப்பில் கூறியதாவது: மனிதர்களைப் போலவே கால்நடைகள், மிருகங்களுக்கும் உணர்வுகள், உணர்ச்சிகள் உள்ளன. மிருகங்களால் பேச முடியாது என்பதால் அவற்றின் உரிமைகளை நாம் பறிக்க முடியாது. மிருகங்களுக்கும், மனிதர்களுக்கு இடையே உள்ள ஒரே வித்தியாசம் பேசும் தன்மைதான்.

அந்த எருமை மாடுகளை கொடுமைப்படுத்திய அவற்றின் உரிமையாளர்களிடம் அவற்றை ஒப்படைக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இதைக் கூறுகிறேன்.

பறிமுதல் செய்யப்பட்ட 68 எருமை மாடுகளையும், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (பிசிஏ) கீழ் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. மிருகங்கள், கால்நடைகளை பாதுகாக்கும் பொறுப்பை சட்டம் வழங்கியுள்ளது.

ஒரு மிருகத்துக்கோ, கால்நடைக்கோ கொடுமைகளை விளைவித்த ஒருவரிடம் அவற்றை ஒப்படைக்க முடியாது. இந்த கால்நடைகளை எம்ஏஏ பவுண்டேஷன் என்று அழைக்கப்படும் கோசாலையில் ஒப்படைக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் அதிகாரிகள், கால்நடை மருத்துவருடன் மாதத்துக்கு 2 முறை கோசாலைக்குச் சென்று ஆய்வு செய்யவேண்டும். பின்னர் அதுதொடர்பான அறிக்கையை அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE