குஜராத் | ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ள 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேரை குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்)போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஒரு பிரிவான ஐஎஸ்கேபி (கோரசான் மாகாண இஸ்லாமிக் ஸ்டேட்) ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏடிஎஸ் போலீஸார் கண்காணிப்பு பணி மேற்கொண்டிருந்தனர்.

இதில் போர்பந்தரில் இருந்து மீன்பிடி படகில் செல்ல முயன்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் இவர்கள் மூவரும் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்த உபேத் நசீர் மீர், ஹனான் ஹயாத் ஷால், முகமது ஹாஜிம் ஷா என்பதும் இவர்கள் ஐஎஸ்கேபி அமைப்பில் சேருவதற்காக ஈரான் வழியாக ஆப்கானிஸ்தான் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அளித்த தகவலின் பேரில் சூரத் நகரில் சுமேரா பானு என்ற பெண்ணை ஏடிஎஸ் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களை கைப் பற்றினர்.

ஆயுதங்கள் பறிமுதல்: போர்பந்தரில் பிடிபட்ட மூவரிடம் இருந்து அடையாள ஆவணங்கள், டிஜிட்டல் தொலைத்தொடர்பு சாதனங்கள், டேப்லட், மொபைல் போன்கள் மற்றும் சில ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து ஏடிஎஸ் அதிகாரிகள் கூறும்போது, “மூவரும் தங்களை வழிநடத்தும் அபு ஹம்சா என்பவர் மூலமாக ஐஎஸ்கேபி அமைப்பில் சேரவிருந்ததாக தெரிவித்தனர். மீன்பிடி படகில் தொழிலாளர்களை போல ஈரான் செல்வது இவர்கள் திட்டம். டிஜஜி திபேன் பத்ரன் தலைமையிலான ஏடிஎஸ் படையினர் இவர்களை கைது செய்ததன் மூலம் ரகசிய சிறப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE