தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக பிரபுல் படேல், சுப்ரியா சுலே நியமனம்

By செய்திப்பிரிவு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக பிரபுல் படேல், சுப்ரியா சுலே ஆகியோரை கட்சியின் தேசிய தலைவர் சரத் பவார் நியமித்துள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அக்கட்சி தொடங்கி 25-வது ஆண்டு தொடங்குவதையொட்டி டெல்லியில் நேற்று விழா கொண்டாடப்பட்டது.

கட்சியின் வெள்ளி விழாவை முன்னிட்டு, அக்கட்சிக்கான புதிய செயல் தலைவர்களை சரத் பவார் நேற்று அறிவித்துள்ளார்.

அதன்படி கட்சியின் மூத்த தலைவரான பிரபுல் படேல், பவாரின் மகள் சுப்ரியா சுலே ஆகியோர் கட்சியின் தேசிய செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சரத் பவார் வெளியிட்டுள்ளார்.

கடந்த மே மாதத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை சரத் பவார் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து ராஜினாமா செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி அக்கட்சியின் தொண்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்யும் முடிவை சரத் பவார் கைவிட்டார்.

இந்நிலையில், நேற்று கட்சிக்கு புதிய செயல் தலைவர்களை சரத் பவார் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சாஹன் புஜ்பால் கூறியதாவது: கட்சியின் 2 செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே, பிரபுல்படேல் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவை, மக்களவைத் தேர்தல் பணிகளை அவர்கள் பிரித்துக் கொண்டு செயல்படுவர். மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் கட்சித் தலைவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எனவே, கட்சிக்கு 2 செயல் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுளளனர். இவ்வாறு சாஹன் புஜ்பால் கூறினார்.

அஜித் பவார் வாழ்த்து: கட்சிக்கு 2 செயல் தலைவர்களை சரத் பவார் அறிவித்த நிலையில், சுப்ரியா, பிரபுல் படேல் ஆகியோருக்கு சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கட்சியின் மூத்த தலைவர் பதவிக்கு அஜித் பவாரின் பெயர் அடிபட்ட நிலையில் அவருக்கு சரத் பவார் எந்தப் பதவியையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE