ஹைதராபாத்தில் 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆஸ்துமாவுக்கு மீன் பிரசாதம் விநியோகம்

By என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: ஹைதராபாத் நாம்பல்லி மைதானத்தில், நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு ஆஸ்துமா நோயாளிகளுக்கான மீன் மருந்து பிரசாத விநியோகத்தை தெலங்கானா மாநில கால்நடைத் துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் யாதவ் தொடங்கி வைத்தார்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து வழங்குவதை, ஹைதராபாத்தைச் சேர்ந்த பாதினி குடும்பத்தார் பாரம்பரியமாக மேற்கொண்டு வருகின்றனர். இது ‘மீன் பிரசாதம்’ என அழைக்கப்படுகிறது. கரோனா பரவல் காரணமாக 3 ஆண்டு இடைவெளிக்குப்பின் இந்த மீன் பிரசாத நிகழ்ச்சி ஹைதராபாத் நம்பள்ளி கண்காட்சி மைதானத்தில் நேற்று நடந்தது.

மீன் மருந்து பிரசாத விநியோக வம்சாவளிகளான பத்தன குடும்ப உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு மீன் பிரசாதம் வழங்கினர்.

இதுகுறித்து அமைச்சர் ஸ்ரீநிவாஸ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 170 ஆண்டுகளாக பத்தன குடும்பத்தினர் ஆஸ்துமா நோய்க்காக மீன் மருந்து பிரசாதத்தை இலவசமாக வழங்கி வருகின்றனர். இதனை சாப்பிட்ட பலர் ஆஸ்துமா நோயிலிருந்து விடுபட்டதாக கூறுகின்றனர். கரோனா பரவலால் 2020-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகள் விநியோகம் செய்யப்படவில்லை.

தற்போது, ஹைதராபாத் நாம்பல்லி பொருட்காட்சி மைதானத்தில் மாபெரும் பந்தல்கள் போட்டு பொது மக்களுக்கு மீன் மருந்து விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மருந்தை பெறுவதற்கு மக்கள் பல மாநிலங்களில் இருந்து வருவார்கள் என்பதால் அதற்கு தகுந்தபடி ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்ரீநிவாஸ் யாதவ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE