41 வயதுக்குள் 16,000 இதய அறுவை சிகிச்சை செய்த குஜராத் மருத்துவர் உயிரிழப்புக்கு என்ன காரணம்?

By கு.கணேசன்

குஜராத் மாநிலம் ஜாம் நகரில், கடந்த 6-ஆம் தேதி அதிகாலை, மருத்துவர் கவுரவ் காந்தி மாரடைப்பால் உயிரிழந்த செய்தி அந்த நகரின் மக்களை மட்டுமல்லாமல், மருத்துவத் துறையினர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

காரணம், கவுரவ் காந்தி சாதாரண மருத்துவர் அல்ல; கடந்த 10 ஆண்டுகளில் 16,000 இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட சிறப்பு மருத்துவர். வயது 41 தான் என்றாலும், இந்த இளம் வயதிலேயே ஜாம்நகரில் மிகச் சிறந்த இதயநல மருத்துவராகப் புகழ் பெற்றிருந்தவர். ஏராளமான இதய நோயாளிகளுக்கு ஆபத்பாந்தவனாக இருந்தவர்.

உறக்கத்தில் மரணம்: கடந்த திங்கட்கிழமை இரவு அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும், வழக்கமான இரவு உணவை முடித்துக் கொண்டு படுக்கைக்குச் சென்றார். மறுநாள் காலையில் அவர் வழக்கமாக எழுந்திருக்கும் நேரத்தில் எழுந்திருக்கவில்லை. அதனால், வீட்டில் உள்ளவர்கள் அவரை எழுப்பினர். அப்போது அவர் நினைவிழந்த நிலையில் இருந்ததால், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் உடனடியாக கொண்டு சென்றுள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கவுரவ் காந்தி மாரடைப்பால் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

ஆபத்து காரணிகள் இல்லை: இத்தனைக்கும் முதல்நாள் படுக்க செல்லும் வரை அவருக்கு உடலில் எந்த சிரமமும் இருந்ததாகத் தெரியவில்லை. உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்ற மாரடைப்புக்கான ஆபத்துக் காரணிகளும் அவருக்கு இல்லை என்றே அவருடைய குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்களும் அவருக்கு இல்லை என்றே தெரிகிறது. அப்படி இருந்தும் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏன் ஏற்பட்டது என்பது தான் இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.

நோயாளிகள் அதிகம்: மருத்துவர் கவுரவ் காந்தி புகழ்பெற்ற இதய நல அறுவை சிகிச்சை மருத்துவர் என்பதால், அன்றாடம் அவரிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கூட்டம் அதிகம். அதனால், தினமும் 14 மணி நேரம் மருத்துவமனையில் மனித உயிர்க் காக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்.

ஓய்வில்லா பணி: நாட்டிலுள்ள எல்லா துறைகளிலும் வாரத்தில் ஒரு நாளாவது விடுமுறை இருக்கும். மருத்துவத் துறையில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை அரை நாள்தான் விடுமுறை. அப்போதுகூட “நோயாளிக்கு மிகவும் அவசரம்” என்றால், உடனே அவரை கவனிக்க மருத்துவர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது இருக்கும். கவுரவ் காந்தியைப் போன்ற உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு அந்த அரை நாள் ஓய்வு கிடைப்பதும் அரிது. காரணம், அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள இதயநோயாளிகளுக்குச் சிறப்பு மருத்துவர்களின் தொடர் கவனிப்பு எல்லா நேரங்களிலும் தேவைப்படுகிறது. சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது உயர் சிறப்பு மருத்துவர்களின் (Super specialties) எண்ணிக்கை மிகவும் குறைவு.

அதனால், பணி அழுத்தம் காரணமாகப் பல மருத்துவர்களுக்குப் போதிய ஓய்வு கிடைக்காமல் போகிறது. அவசரப் பிரிவுக்கு இரவில் வரும் நோயாளிகளும் அதிகம். அதனால், உயர் சிறப்பு மருத்துவர்களுக்குப் பல இரவுகளில் உறக்கமும் தொலைந்து விடும். இவற்றின் விளைவால் மருத்துவர்களில் பலர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மன அழுத்தம் போன்ற பல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

மிகையான மன அழுத்தம்: கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவர் கவுரவ் காந்தி 16,000 இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறார் என்றால், அவருடைய கடுமையான உழைப்பைப் புரிந்துகொள்ள முடியும். அவருக்கு உயர் ரத்த அழுத்தமும், நீரிழிவும் இல்லை என்றாலும் பணிச்சூழல் காரணமாக ஓய்வும் உறக்கமும் குறைவாக இருந்திருக்கலாம். மன அழுத்தம் இருந்திருக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

தொடர் மன அழுத்தம் இதயநலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது அவர் அறிந்ததுதான் என்றாலும், மனித உயிரைக் காக்கும் பணியில் இருந்தவருக்கு தனது மன அழுத்தம் குறைய வழி தேடவோ, போதிய ஓய்வு எடுக்கவோ நேரம் இருந்திருக்காது. அதை அவர் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்திருக்கலாம்.

எனவே, மிகையான மன அழுத்தம்தான் அவரது மாரடைப்புக்கும் அதைத் தொடர்ந்து இறப்புக்கும் காரணமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

அடுத்ததாக, அவருடைய மரபுக்கூறு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அல்லது இதயத் தசை நோய் (Cardiomyopathy), இதய மிகைத் துடிப்புப் பிரச்சினைகள் (Arrhythmias), இதயத்தில் பிரச்சினைகள் (Long QT syndrome) வெளியில் தெரியாமல் இருந்திருக்கலாம்.

திடீர் உயிரிழப்பை தடுப்பது எப்படி?: பொதுவாக, அரசு மருத்துவர்களாக இருந்தாலும் சரி, தனியார் மருத்துவர்களாக இருந்தாலும் சரி, போதிய ஓய்வும் உறக்கமும் கிடைப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களுக்குப் பணி செய்யும் காலமும் சூழலும் அமையும்போதுதான் மன அழுத்தம் குறையும். அதன் பலனாக, மருத்துவர் கவுரவ் காந்திக்கு ஏற்பட்டது போன்ற திடீர் உயிரிழப்பை தவிர்க்க முடியும். மேலும், மருத்துவர்கள் நலமாகவே இருந்தாலும், காலாண்டு செக்-அப், ஆண்டுக்கு ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் போன்ற முன்பரிசோதனைகள் செய்யப்படுவதை இந்திய மருத்துவர்கள் சங்கம் மூலம் மருத்துவர்களுக்குக் கட்டாயமாக்க வேண்டும். கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் ஆரோக்கியம் சீராக உள்ளது எனும் சான்றிதழை அந்தந்த மருத்துவமனைகள் ஆண்டுதோறும் பெற வேண்டும் என்னும் விதி அமைக்கப்பட வேண்டும்.

தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்களால், இளம் வயது உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், ஆரோக்கிய உணவில் கவனம் செலுத்துவது, உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது, வாரம் ஒரு நாள் முழுமையாக ஓய்வெடுப்பது, மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்காமல் இருப்பது, புகைப்பதைத் தவிர்ப்பது, ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக் கொள்வது, நீரிழிவையும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்துவது போன்ற வாழ்வியல் விதிகளைக் கடைபிடித்து இதய நலம் காக்க வேண்டிய கடமை பொது மக்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மருத்துவருக்கும் உண்டு. இப்படி ஆரோக்கியம் காப்பதன்மூலம் தங்களைக் காத்துக் கொள்வது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மக்கள் சமுதாயத்தையும் காக்கவேண்டிய அறம் சார்ந்த கடமை எல்லா மருத்துவர்களுக்கும் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்