இந்திய பெருங்கடல் பகுதியில் சுகோய் போர் விமானம் 8 மணி நேரம் ரோந்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மலேசிய தீபகற்பத்துக்கும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையில் அமைந்துள்ள மலாக்கா நீரிணை இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடலை இணைக்கிறது.

உலகின் கடல்சார் வர்த்தகத்தில் 25 சதவீதம் இந்த நீரிணை வழியாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் 50,000-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மலாக்கா நீரிணை வழியாக கடந்து செல்கின்றன. குறிப்பாக சீனாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதம் மலாக்கா நீரிணை வழியாக நடைபெறுகிறது.

தைவான் மீது சீன ராணுவம் தாக்குதல் நடத்த தயங்குவதற்கு மலாக்கா நீரிணை மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஒருவேளை தைவானை, சீனா தாக்கினால் மலாக்கா நீரிணை பகுதியில் சீன கப்பல்கள் நுழைய முடியாத வகையில் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா தடைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில். சீனாவின் ஆதிக்கம், அச்சுறுத்தல்களை முறியடிக்க இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய விமானப் படையின் ரஃபேல் மற்றும் சுகோய் ரக விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதம் விமானப் படையின் ரஃபேல் போர் விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் 6 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து இந்திய விமானப் படையின் சுகோய் ரகத்தை சேர்ந்த எஸ்.யு.30 எம்கேஐ ரக போர் விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ச்சியாக 8 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டு புதிய சாதனை படைத்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE