அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சுக்கு இடையூறாக 'மோடி' கோஷம் - பதிலடி கொடுத்த அமைச்சர்

By செய்திப்பிரிவு

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்ட விழாவில், மோடி கோஷம் எழுப்பப்பட்டது சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் கிழக்கு டெல்லி வளாக திறப்பு விழாவில் பங்கேற்றார். விழாவில் அவர் பேசும்போது, சிலர் 'மோடி, மோடி' என்று கோஷங்கள் எழுப்பி அவரின் உரையை இடைமறித்தனர். கோஷம் எழுப்பியவர்களுக்கு “கோஷங்களால் கல்வி முறையை மேம்படுத்த முடியும் என்றால், அது கடந்த 70 ஆண்டுகளில் நிறைய நடந்திருக்கும்” என்று கெஜ்ரிவால் பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து கோஷங்கள் எழுப்பிய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஆம் ஆத்மி, நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்கள் கலந்துகொண்டு வேண்டுமென்றே சலசலப்பை ஏற்படுத்தினர் என்று குற்றம்சாட்டியுள்ளது.

அந்த வீடியோவில் அரவிந்த் கெஜ்ரிவால், "கைகூப்பி உங்களை கேட்டுக்கொள்கிறேன். பிற கட்சி மற்றும் ஆம் ஆத்மி என இங்கிருக்கும் அனைவரும் நான் சொல்வதை ஒரு ஐந்து நிமிடம் கேளுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், கோஷம் போடுவதை தொடருங்கள். எனது யோசனைகளும், எண்ணங்களும் உங்களுக்கு பிடிக்காது என்று எனக்குத் தெரியும்.

இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச உரிமை உள்ளது. நீங்களும் உங்களுக்கு விரும்பிய கருத்தை தெரிவிக்கலாம். ஆனால், இப்படி பேசும்போது கோஷமிடுவது சரியல்ல" என்று கோஷமிட்டவர்களிடம் பேசுகிறார்.

இதேபோல், டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி பேசும்போதும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, "இதனால்தான் அனைவருக்கும் கல்வி தேவைப்படுகிறது என்று நாங்கள் சொல்கிறோம்" என்று கோஷமிட்டவர்களுக்கு அதிஷி பதிலடி கொடுக்க, கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டி அவருக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE