வெளிநாடுகளில் இந்தியா குறித்து ராகுல் பேசுவது தேச நலனுக்கு ஏற்றதல்ல: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நமது நாட்டின் அரசியல் குறித்து வெளிநாடுகளில் ராகுல் காந்தி பேசுவது நாட்டு நலனுக்கு ஏற்றதல்ல என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று வெளியுறவுத் துறையில் 9 ஆண்டு கால சாதனை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது: "நம்பிக்கையும் திறமையும் கொண்ட நாடாக உலகம் இந்தியாவைப் பார்க்கிறது. இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என உலகம் குறிப்பாக தெற்குலகம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.

உலகின் பெரும்பாலான நாடுகள் வளர்ச்சிக்கான பங்குதாரராக இந்தியாவைப் பார்க்கின்றன. அதோடு, பொருளாதார ஒத்துழைப்பாளராகவும் உலக நாடுகள் இந்தியாவைப் பார்க்கின்றன. தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் தொழில்நுட்பம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதன்மூலம் இளைஞர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர். திட்டங்கள் திட்டமிட்டபடி அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான வலிமையான அமைப்பை இந்தியா கொண்டிருக்கிறது.

இந்திரா காந்தி கொல்லப்பட்ட தினம் கனடாவில் கொண்டாடப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். இதற்குள் ஒரு முக்கிய பிரச்சினை இருக்கிறது என்று நினைக்கிறேன். வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான் இவ்வாறு நடக்க முடியுமே தவிர வேறு காரணங்களும் இருக்க முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது. உண்மை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், வன்முறையை ஆதரிப்பவர்கள் ஆகியோருக்கு கனடா இடம் கொடுக்குமானால் அது இருதரப்பு உறவுகளுக்கு நல்லதல்ல; கனடாவுக்கும் நல்லதல்ல.

ராகுல் காந்தி எப்போதெல்லாம் வெளிநாடு செல்கிறாரோ அப்போதெல்லாம் இந்தியாவை விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். உலகம் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் ஒரு சமயத்தில் ஒரு கட்சி வெற்றி பெறுகிறது. வேறொரு சமயத்தில் வேறொரு கட்சி வெற்றி பெறுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்றால், இதுபோன்ற மாற்றங்கள் நிகழாது. தேர்தலின் அனைத்து முடிவுகளும் ஒன்றுபோலவே இருக்கும். இந்தியாவுக்குள் அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், நாட்டுக்கு வெளியே நாட்டின் அரசியல் குறித்துப் பேசுவது நாட்டு நலனுக்கு ஏற்றதாக இருக்க முடியாது." இவ்வாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE