விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.143 அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனால், முந்தைய ஆண்டில் ரூ.2,040 ஆக இருந்த பொதுவான தர நெல் வகையின் ஆதரவு விலை ரூ.2,183 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, பருப்புக்கான ஆதரவு விலையும் இதுவரை இல்லாத வகையில் உச்சபட்சமாக குவின்டால் ரூ.8,558 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு (சிசிஇஏ) கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், 2023-24 பயிர் ஆண்டுக்கான காரீப்(கோடை) பருவ பல்வேறு விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மத்திய உணவு, நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: விவசாய செலவுகள், விலைகளுக்கான ஆணையம் (சிஏசிபி) அவ்வப்போது வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்துவருகிறோம்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சில்லறை பணவீக்கம் விரைவாக குறைந்து வரும் இந்த சூழ்நிலையில் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வால் விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள்.

2023-24 பயிர் ஆண்டுக்கு பொதுவான தர நெல் வகையின் ஆதரவுவிலை குவின்டாலுக்கு ரூ.143 அதிகரித்து ரூ.2,183 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.2,040 ஆக இருந்தது.

அதேபோல, ‘ஏ’ கிரேடு நெல் ரகத்துக்கான ஆதரவு விலை ரூ.163 உயர்த்தப்பட்டு ரூ.2,203 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பருப்புக்கு ரூ.8,558: முந்தைய ஆண்டில் ஒரு குவின்டால் பருப்புக்கு ரூ.7,755 வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பு ஆண்டில் அதற்கான ஆதரவு விலை 10.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, ரூ.8,558 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பருப்புக்கான ஆதரவு விலை இதுவரை இல்லாத வகையில் உச்சபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. காரீப் பருவத்தின் முக்கிய பயிராக நெல் உள்ளது. இதற்கான விதைப்பு பணிகள் பொதுவாக தென்மேற்கு பருவமழையின்போது தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி திட்டத்துக்கு ரூ.2,980 கோடி: நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி (லிக்னைட்) திட்ட ஆய்வுகளை ரூ.2,980 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளும் திட்டத்தை தொடர, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் வழங்கியது.

இத்திட்டத்தின்கீழ் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி ஆய்வு 2 பரந்த நிலைகளில் நடத்தப்படுகிறது. முதல் நிலையாக, ஊக்குவிப்பு (பிராந்திய) ஆய்வும், 2-வது நிலையாக கோல்-இந்தியா அல்லாத தொகுதிகளில் விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.

ஊக்குவிப்பு (பிராந்திய) ஆய்வுக்கு ரூ.1,650 கோடியும், கோல்-இந்தியா அல்லாத பகுதிக்கான பணிகளுக்கு ரூ.1,330 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1,300 சதுர கி.மீ. பரப்பளவு, பிராந்திய ஆய்வுகளின்கீழ் உள்ளடக்கப்படும். 650 சதுர கி.மீ. பரப்பளவு விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

ரயில் விபத்துக்கு இரங்கல்: மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறை நிகழ்வுகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நேற்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பிஎஸ்என்எல் திட்டங்களுக்கு ரூ.89,047 கோடி: பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கான 3-வது நிவாரண தொகுப்பாக ரூ.89,047 கோடி மதிப்பீட்டிலான திட்டத்துக்கு நேற்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த தொகுப்பில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ‘ஈக்விட்டி இன்ஃபியூஷன்’ மூலம் 4ஜி மற்றும் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதும் அடங்கும். மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.1.50 லட்சம் கோடியில் இருந்து ரூ.2.10 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
டெல்லி அடுத்த குருகிராம் ஹூடா சிட்டி சென்டர் - சைபர் சிட்டி இடையே ரூ.5,452 கோடியிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்