ஒடிசா ரயில் விபத்து எதிரொலி | வேலைவாய்ப்பு தேடி வெளிமாநிலம் செல்வதை தடுக்க குழு - மம்தா பானர்ஜி நடவடிக்கை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு தேடி வெளி மாநிலம் செல்வதை தடுப்பதற்காக அம்மாநில அரசு ஒரு குழு அமைத்துள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் டெல்லி, மும்பை, தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பணியாற்றி வருகின்றனர். சமீப ஆண்டுகளாக இவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் முயற்சியில் திரிணமூல் காங்கிரஸ் அரசின் முதல்வர் மம்தா பானர்ஜி இறங்கியுள்ளார். இதற்காக அவர் மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் 44 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்துள்ளார்.

இக்குழுவில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் 18 பேரும் பல்வேறு தொழில் பிரிவுகளின் நிபுணர்கள் 26 பேரும் இடம் பெற்றுள்ளனர். மாநில தொழிற்கல்வித் துறை சார்பிலான இக்குழு, வேலைவாய்ப்புக்காக வெளிமாநிலம் செல்வோர் குறித்த புள்ளி விவரங்களை திரட்ட உள்ளது. தரமான தொழிற்பயிற்சி பெற்றவர்கள் மற்றும் எந்தப் பயிற்சியும் பெறாதவர்கள் குறித்து தனித்தனியே தகவல் திரட்டப்பட உள்ளது.

பிறகு இவர்களில் தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கு தங்கள் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பேசி வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எந்த தொழிலும் தெரியாதவர்களுக்கு அவர்கள் விரும்பும் தொழிலுக்கான பயிற்சியை மேற்கு வங்க அரசே உதவித் தொகையுடன் அளிக்க உள்ளது. பிறகு இவர்களுக்கு தங்கள் மாநிலத்திலேயே வேலைவாய்ப்புக்கான உதவி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காலத்தில் சுமார் 15 லட்சம் தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் இருந்து மேற்கு வங்கம் திரும்பினர். இவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு அளிப்பது முதல்வர் மம்தா அரசுக்கு பெரும் சவாலானது. இதனை மனதில் கொண்டு முதல்வர் மம்தா பானர்ஜி இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிய சம்பவமும் இதற்கு காரணமாகிவிட்டது. இந்தரயிலில் பயணித்த மேற்கு வங்கத்தை சேர்ந்த சுமார் 62 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 180 பேரை காணவில்லை.

இந்நிலையில் மேற்கு வங்கதொழிலாளர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வெளி மாநிலங்களில் பணியாற்றுவது தனது அரசுக்கு கெட்டபெயரை ஏற்படுத்தும் எனவும் முதல்வர் மம்தா அஞ்சுகிறார். அதேசமயம் மேற்கு வங்கத்தில் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாக அவருக்கு புகார்கள் கிடைத்துள்ளன. எனவே இந்த இரண்டையும் ஒன்றிணைத்து பிரச்சினைகளை தீர்க்க முதல்வர் மம்தா இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE