மல்யுத்த வீராங்கனைகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமைச்சர் அனுராக் தாக்கூர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

இது தொடர்பாக நள்ளிரவில் அனுராக் பதிவு செய்த ட்வீட்டில், "மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் ஆலோசிக்க அரசு தயாராக உள்ளது. நான் மீண்டும் அவர்களுக்கு இதுதொடர்பாக அழைப்பு விடுக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மல்யுத்த வீரர்கள் வீராங்கனைகள் சந்தித்தனர். இரவு 11 மணிக்கு மேல் சுமார் 1 மணி நேரம் அந்த சந்திப்பு நடந்தது. சாக்‌ஷி மாலிக், சங்கீதா போகத், சத்யவர்த் காடியான் மற்றும் வீரர் பஜ்ரங் புனியா அகியோர் அமைச்சரை சந்தித்தனர். இந்நிலையில் நேற்றிரவு விளையாட்டுத் துறை அமைச்சர் வீராங்கனைகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது ஒரு மைனர் பெண் உள்பட 7 வீராங்கனைகள் பாலியல் புகார் கூறியுள்ளனர். பிரிஜ் பூஷன் சிங் பதவி விலக வேண்டும் அவரை டெல்லி போலீஸார் கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தினைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் மீதான இரண்டு வழக்குகளில் ஒன்று போக்சோ வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE