‘இன்டர்லாக்கிங்’ முறை மாற்றத்துக்கு சதி வேலை காரணமா? - ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியில் சிபிஐ தீவிர விசாரணை

By செய்திப்பிரிவு

பாலாசோர்: ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பகுதியில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விபத்து நடந்த பகுதியில் தேசிய தடய அறிவியல் ஆய்வகத்தின் நிபுணர்களும் தடயங்களை சேகரித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். ‘இன்டர்லாக்கிங்’ முறையில், வெளியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் சதி வேலை இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 2-ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானா ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அந்த வழியாக வந்த பெங்களூரு யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயிலும், தண்டவாளத்தில் விழுந்து கிடந்தரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

‘எலெக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்’ முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதுவே விபத்துக்கு காரணம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

ரயில் தண்டவாளத்தில் ரயில்வே கேட், சிக்னல்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாயின்ட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இவை கட்டுப்பாட்டு அறைகளின் பேனல்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பு இன்டர்லாக்கிங் என்று அழைக்கப்படுகிறது. இதில் வெளியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டதாகவும், இதன் பின்னணியில் சதி இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து, ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ஒடிசா மாநில அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் பரிந்துரை செய்தது. அதை ஏற்று பல்வேறு பிரிவுகளின்கீழ் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

இந்நிலையில், 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு, ஒடிசா மாநிலத்தில் விபத்து நடந்த பகுதியில் நேற்று காலை ஆய்வை தொடங்கினர். இந்த விபத்து மனித தவறால் நடந்ததா, சதி வேலை காரணமா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய ரயில் விபத்து நடந்ததன் பின்னணியில் ‘இன்டர்லாக்கிங்’ முறை மாற்றப்பட்டது காரணமா என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் முதல்கட்ட விசாரணையை தொடங்கினர். தவிர விபத்து தொடர்பான ஆவணங்களை ரயில்வேஅமைச்சகத்திடம் இருந்து சிபிஐ அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், ரயில்வே ஊழியர்கள், மீட்பு படையினர், உள்ளூர் அதிகாரிகள், விபத்தை நேரில் பார்த்தவர்கள் என பல்வேறு தரப்பினரையும் சிபிஐ அதிகாரிகள் சந்தித்து தகவல்களை திரட்டி வருகின்றனர். அவர்களுடன் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் நிபுணர்களும் விபத்து நடந்த பகுதியில் இருந்து பல்வேறு தடயங்களை சேகரித்தனர்.

இதற்கிடையே, விபத்தில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய ரயில் ஓட்டுநர் குணாநிதி மொகந்தி, அவரது உதவியாளர் இருவரும், ‘‘பச்சை சிக்னல் கிடைத்ததால்தான் ரயிலை தொடர்ந்து இயக்கினோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

‘இன்டர்லாக்கிங்’ முறையில் மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை. மெயின் லைன் தண்டவாளத்தில் செல்ல வேண்டிய ரயில், எப்படி லூப் லைனுக்கு மாறியது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், வெளியில் இருந்து ‘இன்டர்லாக்கிங்’ முறையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு ரயில் மாறியிருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ‘இன்டர்லாக்கிங்’ முறையில் மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. இதில் சதி வேலைஇருக்கலாம் என்று சிபிஐ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதற்காக ரயில்வேயில் பின்பற்றப்படும் தொழில்நுட்ப செயல்பாடுகள் பற்றி ரயில்வே நிபுணர்களின் கருத்துகளை அறிய சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

உயிரிழப்பு 288 ஆனது: இதற்கிடையே, ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 13 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் இன்னும் 101 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே மற்றும் புவனேஸ்வர் மாநகராட்சி அதிகாரிகள் உதவி தொலைபேசி எண்களை அறிவித்துள்ளனர். அதன்படி, 18003450061 / 1929 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தகவல்கள் அறியலாம்.

உடல்களை அடையாளம் தெரிவித்தால் அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்