பி
ரணாப் முகர்ஜியின் ஐம்பதாண்டு கால பொது வாழ்க்கையில் அவருடன் வாதிடத் துணிந்தவர்கள் யாரும் வென்றதில்லை. காரணம், அவர்கள் வென்றதாக அவர் ஒப்புக்கொள்வதே இல்லை. அரசியல் வரலாறு, பரிணாமம், அரசியல் சட்டத்தின் நுணுக்கங்கள், நிர்வாகத்தில் அரசியல் சட்டத்தைப் பயன்படுத்தும் விதம், முன்னுதாரணங்கள் பற்றிய தெளிவு, ஆகியவற்றில் அவருக்கு அபாரமான அறிவு. அதற்கு இணையானது இந்த ஐம்பதாண்டு காலத்தில் அவர் ஏற்படுத்திக்கொண்ட நட்பு வட்டம், நல்லெண்ண ஆதரவு ஆகியவை. இந்த மாதம் வெளியான அவருடைய சுயசரிதைக்குப் பத்திரிகைகளில் அமோக பாராட்டுகள்.
பிரதமராவதற்கு முன்னால் இலக்கியமாக எழுதிய ஜவஹர்லால் நேரு, கடைசி வரை நாட்டு நிர்வாகத்தில் மட்டுமே கவனம் செலுத்தி மரணம் அடைந்தார். பிரதமர்களில் பி.வி. நரசிம்ம ராவ், இந்தர் குமார் குஜ்ரால் தவிர வேறு யாரும் வாழ்க்கை வரலாற்றை எழுதியதில்லை, சிலருக்கு நேரமும் ஆற்றலும் இல்லை. சிலருக்கோ எழுதுவதற்கான மேதமை இல்லை. ஒரு கதையாகச் சொல்வதற்குக்கூட சிறு குறிப்புகள் கைவசம் இருந்ததில்லை. இவையெல்லாம் கைவசம் இருந்தும் எழுதுவதற்கு மன்மோகன் சிங் தயங்குவதைப்போலத் தெரிகிறது. நம் நாட்டின் பெரும்பாலான தலைவர்கள் உள்ளத்தில் புதைந்திருக்கும் உண்மைகளைப் பேசத் தயங்குகிறார்கள்.
இந்தப் பின்னணியில், ‘தாதா’ என்று அன்போடு அழைக்கப்படும் பிரணாப் முகர்ஜி 3 தொகுதிகளை வெளியிட்டுவிட்டு நான்காவதை தயாரித்துக் கொண்டிருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும். 1984-ல் இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு நிகழ்ந்த அரசியல் நடவடிக்கைகள் நூலில் அழகாகக் கோக்கப்பட்டுள்ளன.
முதல் இரண்டு தொகுதிகள் அவர் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலத்திலேயே வெளியிடப்பட்டதால் பலவற்றை அவர் சொல்லாமல் மறைத்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதற்குப் பிந்தைய நூலிலும் அதே பாணி தொடர்வதை ஏற்க முடியவில்லை.
பிரதமர் பதவி வகிக்கத் தகுதியான கல்வி, அரசியல் – நிர்வாக அனுபவம், ஆற்றல் ஆகியவை பிரணாபிடம் இருந்தபோது மன்மோகன் சிங்கை ஏன் தேர்வு செய்தார் சோனியா? முதல் ஐந்தாண்டு காலத்தில் நிதித்துறையை ஏற்க ஏன் பிரணாப் மறுத்தார்? ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஏன் ஏற்றார்? குடியரசுத் தலைவர் பதவிக்கு ஹமீத் அன்சாரியை நிறுத்த முடிவு செய்திருந்த சோனியாவின் எண்ணம் ஈடேறாமல், இடதுசாரிகளைக் கொண்டு எப்படி காரியத்தைச் சாதித்துக் கொண்டார்?
இந்த சம்பவங்களை நூலில் எழுதியிருக்கிறார் ஆனால் உண்மைகளையும் விவரங்களையும் தராமல் விட்டுவிட்டார். நிதி இலாகா வேண்டாம் என்று 2004-ல் சோனியாவிடம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்; பிறகு 2009-ல் ஏன் ஏற்றுக்கொண்டார்? பொருளாதார விவகாரங்களில் மன்மோகனுக்கும் தனக்கும் மாறுபட்ட கருத்துகள் இருந்தன என்கிறார்.
2004-ல் மன்மோகன், ப. சிதம்பரத்துடன் கருத்து வேறுபாடு இருந்ததால் நிதி இலாகா வேண்டாம் என்றவர், ஐந்தாண்டுகள் கழித்து தயக்கம் ஏதும் இல்லாமல் அதை ஏற்றுக்கொள்கிறார். அவர் நிதியமைச்சராக இருந்தபோது வளர்ச்சிவீதம் முதலில் தேங்கியது, பிறகு சரிந்தது. அதற்குப் பிறகு எழுச்சி பெறவே இல்லை.
ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவுக்கும் தனக்கும் உடன்பாடே இல்லை என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.
2ஜி ஊழல் தொடர்பாக அவருடைய அலுவலகத்துக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் இடையில் வேடிக்கையான சில சம்பவங்கள் நிகழ்ந்தன. கறுப்புப் பண விவகாரத்தைக் கிளப்பிய பாபா ராம்தேவுடன் பேச, அமைச்சரவை சகாக்களுடன் தில்லி விமான நிலையத்துக்கே சென்றதைப் பற்றி 278 பக்க புத்தகத்தில் ஓரிடத்தில்கூட குறிப்பிடப்படவில்லை.
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட உடனேயே அவர் பிரதமராகியிருக்க வேண்டும், ராஜீவ் காந்தி பிரதமரானார். 2004-ல் சோனியா மீண்டும் அந்தப் பதவியை அவருக்கு மறுத்தார். உள்துறை அமைச்சராக்கக்கூட அவர் விரும்பவில்லை. 2007-ல் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 2012-ல் தனது மதியூகத்தையும் தனக்கிருந்த செல்வாக்கையும் பயன்படுத்தி தன்னைத் தவிர இன்னொருவரை சோனியா தேர்வு செய்துவிடாமல் பார்த்துக்கொண்டார். இதையெல்லாம் அவர் நூலில் கூறவில்லை.
பிரதமர் பதவியிலிருக்கும் மன்மோகனையே குடியரசுத் தலைவர் பதவிக்கும் வேட்பாளராகத் தேர்வு செய்யப்போகிறார் சோனியா என்ற வதந்தி பரவியதும் 2012 ஜூன் 2-ல் சோனியாவைச் சந்தித்த பிரணாப், பாதிக்கூட்டத்திலேயே வெளியேறினார்.
மக்களவையில் அமளி ஏற்பட்டபோது சுஷ்மா ஸ்வராஜை, பிரணாப் கடிந்துகொண்டார். பொறுமையிழந்து இரைந்த பிரணாபைப் பார்த்து சோனியா கூறினார், “முன்கோபி என்பதால்தான் உங்களைக் குடியரசுத் தலைவராக்கவில்லை” என்று.
“குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட எம்.ஜே. அக்பர் (இப்போது பாஜக இணையமைச்சர்) கடுமையாக உழைத்தார்” என்றும் பிரணாப் எழுதியிருக்கிறார். 2012 மே 27-ல் பிரணாபைச் சந்திக்க எம்.ஜே. அக்பர் வந்தார். எல்.கே. அத்வானி, ஜஸ்வந்த் சிங் ஆகியோரிடம் பேசியதாகவும் அவர்கள் ஆதரிப்பதாகவும் பிரணாபிடம் கூறியிருக்கிறார் அக்பர். “பாஜகவினரிடமும் பேசினேன், அவர்களும் என்னை ஆதரிக்கத் தயாராக இருக்கின்றனர்” என்று காங்கிரஸ் தலைமையிடம் பிரணாப் கூறினாரா என்ற விளக்கம் நூலில் இல்லை.
மன்மோகன் சிங், சோனியா, சிதம்பரம், கபில் சிபல் போன்றோர் பலமுறை வற்புறுத்தியும் வோடபோன் நிறுவனத்துக்கு முன்தேதியிட்டு வரி விதித்ததைக் கைவிட மாட்டேன் என்று கூறிவிட்டார் பிரணாப். இந்த விவகாரத்தில் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள மூத்த சக அமைச்சர் வோடபோன் நிறுவனத்தின் மூத்த அதிகாரியுடன் வந்தார் என்று வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அமைச்சர் யார் என்பதைத் தெரிவிக்காமலேயே எழுதிமுடித்துவிட்டார். அரசின் தேவையற்ற கட்டுப்பாடுகளையெல்லாம் 1991-ல் களைந்திருக்க, அவற்றையெல்லாம் மீண்டும் கொண்டுவர ஏன் விரும்புகிறார் என்பதை பிரணாப் விளக்கவில்லை. பாரபட்சமில்லாத வரலாற்றாசிரியர் யாரேனும் பின்னாளில் அதற்கான விளக்கத்தை அளிக்கக்கூடும்.
தமிழில்: ஜூரி
சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்
முதன்மை ஆசிரியர்
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago