காங்கிரஸ் நிர்வாகி படுகொலை - உ.பி. முன்னாள் எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரவுடி கும்பலைச் சேர்ந்தவரும், உத்தரபிரதேச முன்னாள் எம்எல்ஏவுமான முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்தவர் காங்கிரஸ் தலைவர் அஜய் ராய். இவரது சகோதரர் அவதேஷ் ராயும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக இருந்தார். இவர் டெல்லி லகுராபிர் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள தனது சொந்த ஊரில் அவதேஷ் ராய், தனது சகோதரர் அஜய் ராயுடன் இருந்தபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ரவுடி கும்பலின் தலைவரும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

முக்தார் அன்சாரி, உ.பி.யின் மாவ் சதார் தொகுதியிலிருந்து 5 முறை எம்எல்ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். 2022-ம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் அவர் இருந்து வந்துள்ளார்.

வாரணாசியிலுள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த கொலை வழக்கு விசாரணை அண்மையில் நிறைவுற்ற நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, முன்னாள் எம்எல்ஏ முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனையை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE