குஜராத் தேர்தலில் ஜாதிய கணக்கு: காய் நகர்த்தும் காங்கிரஸ் - பாஜக

By நெல்லை ஜெனா

நீண்ட சர்ச்சைக்குப் பின் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி ஒரு வழியாக அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பல நாட்கள் முன் கூட்டியே, அங்கு தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது. ஆளும் கட்சியான பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும், தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், இந்த முறை ஜாதிய கணக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. இட ஒதுக்கீடு போராட்டத்தால் படேல் சமூகத்தினரும், பால் விலை மற்றும் விவசாய பிரச்சினைகளால், ஷத்ரிய தாக்கூர் சமூகத்தினரும், மாட்டிறைச்சி பிரச்சினையில் நடந்த தாக்குதலால் தலித் சமூகத்தினரும், ஆளும் பாஜக அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். குஜராத் மக்கள் தொகையில் கணிசமான அளவு உள்ள இச்சமூக மக்களை புறக்கணித்துவிட்டு பாஜகவால் அரசியல் செய்ய முடியாது.

மூன்று தலைவர்கள்

இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸும் திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. இதற்காக மூன்று இளம் தலைவர்களை தங்கள் அணிக்குக் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

படேல் சமூக இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுத்தவர் ஹர்திக் படேல், குஜராத் ஷத்ரிய தாக்கூர் சேனா தலைவர் அல்பேஷ் தாக்கூர், தலித் சமூகத்தினரை ஒருங்கிணைத்து வரும் ஜிக்னேஷ் மேவானி - இவர்கள் மூன்று பேரும் குஜராத் பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி பிரபலமானவர்கள். இவர்களுக்கென அவர்கள் சார்ந்த சமூகத்தில் வலுவான ஆதரவு தளம் உள்ளது. இதை தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

ஷத்ரிய தாக்கூர் சேனா தலைவர் அல்பேஷ் தாக்கூர் காங்கிரஸில் இணைந்துள்ளார். அவருடன் ஆயிரக்கணக்கானோரும் காங்கிரஸில் இணைந்தனர். இதன் மூலம் குஜராத்தில், 40 சதவீத அளவில் உள்ள பிற்பட்ட சமூகத்தினரின் ஓட்டுகளை திரட்ட முடியும் என காங்கிரஸ் நம்புகிறது.

இதுபோலவே படேல் இடஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர் ஹர்திக் படேலை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையிலும் காங்கிரஸ் இறங்கியுள்ளது, அவரை, அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும், ஹர்திக் படேல் ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை ஹர்திக் படேல் மறுத்துள்ளார்.

மேலும் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி, குஜராத்தில் தலித் சமூகத்தினர் மீது தாக்குதல் நடந்தபோது, பாஜக அரசுக்கு எதிராக அவர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அவர்கள் கோபத்தை நினைவூட்டி பாஜகவுக்கு எதிராக திருப்ப காங்கிரஸ் எண்ணுகிறது. தலித் சமூக போராளி ஜிகனேஷ் மேவானிக்கும், காங்கிரஸ் வலை வீசுகிறது.

அமித் ஷா தீவிரம்

ஆனால், இதற்கு சற்றும் சளைக்காமல் பாஜகவும் ஜாதிய கணக்கில் தீவிரம் காட்டி வருகிறது. ஜாதி ரீதியாக ஓட்டுகளை ஒருங்கிணைப்பதில் வல்லவரான பாஜக தலைவர் அமித் ஷா, சொந்த மாநிலத்தில் நேரடியாக களம் இறங்கியுள்ளார். அதிருப்தியில் உள்ள சமூகங்களை சேர்ந்த தலைவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார். அவர்களது கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் கனிவுடன் பரிசீலிக்கும் என வாக்குறுதி அளித்து வருகிறார்.

நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும், சுதேச சமஸ்தானங்களை, இந்தியாவுடன் இணைத்து சாதனை படைத்தவருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை அக்டோபர் 31-ல் பெரிய அளவில் கொண்டாட பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது. படேல் இடஒதுக்கீடு போராட்ட குழுவை சேர்ந்த வருண் படேல், ரேஷ்மா படேல் உள்ளிட்டோரை பாஜக தன் பக்கம் இழுத்துள்ளது. பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த மிக முக்கிய ஜாதி தலைவர்களிடம் பாஜகவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

குஜராத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸின் ஜாதிய கணக்கு பற்றி, அரசியல் பார்வையாளர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், ''குஜராத்தில் நரேந்திர மோடிக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக, 2014 பாராளுமன்ற தேர்தலில் பாஜக 60 சதவீத அளவிற்கு வாக்குகளைப் பெற்றது. ஆனால், அங்கு தற்போது நிலைமை மாறி விட்டது. சட்டசபை தேர்தலில் இந்த முறை, பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் இதுவரை இல்லாத அளவு எதிர்ப்பை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதை நரேந்திர மோடியும் உணர்ந்துள்ளார். அதனால் தான், ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைக்கிறார். பிரச்சினைகளை எச்சரிக்கையுடன் கையாள்கிறார். பாஜகவுக்கு வழக்கமான ஆதரவு தளமாக இருந்த படேல் உள்ளிட்ட சமூகங்களின் ஓட்டுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. படேல் சமூக வாக்குகளை ஈர்க்கும் திட்டத்துடன், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை பிரமாண்டமாக கொண்டாட பாஜக ஏற்பாடு செய்து வருகிறது. இந்து உணர்வின் ஊடாக, ஜாதிய உணர்வை ஈர்த்து ஒருங்கிணைக்கும் கலையை கற்றிருக்கும் பாஜக அதை குஜராத் தேர்தலிலும் செயல்படுத்தும்.

அதேசமயம் காங்கிரஸும், பாஜக மீது அதிருப்தியில் உள்ள பிற்பட்ட சமூகத்தினர் மற்றும் படேல் சமூகத்தினரின் ஆதரவை பெற முயலுகிறது. ஆனால், வேறுபட்ட சமூகதளங்களை கொண்ட ஹர்திக் படேலையும், அல்பேஷ் தாக்கூரையும் ஒரே அணயில் சேர்த்தால், பொருந்தாத கூட்டணியாக முடியும். வேறுபட்ட இரு சமூகங்கள் தேர்தலில் ஒரு கட்சியின் பக்கம் நிற்பது நடக்காத ஒன்று. இந்த விஷயத்தில் காங்கிரஸ் கவனமாக இருக்க வேண்டும்'' என்று ரவீந்திரன் துரைசாமி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்