‘தவறான வடிவமைப்பு; நடவடிக்கை கட்டாயம்’ - பாலம் இடிந்தது தொடர்பாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் நிதிஷ் குமார், பாலம் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பிஹார் மாநிலத்தின் அகுவானிகாட் மற்றும் சுல்தான்கஞ்ச்-ஐ இணைக்கும் வகையில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்துவிழும் வீடியோ ஒன்று ஞாயிற்றுக்கிழமை சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

இந்த நிலையில் பாலம் இடிந்த ஒருநாளுக்கு பின்னர் அதுகுறித்து பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அவர்," நேற்று இடிந்து விழுந்த பாலம், ஏற்கனவே கடந்த ஆண்டும் இடிந்து விழுந்திருக்கிறது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த பாலம் சரியாக திட்டமிட்டு கட்டப்படாததால் மீண்டும் மீண்டும் இடிந்து விழுகிறது. துறை ரீதியிலான அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, மாநிலத் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அந்தப் பாலத்தின் கட்டுமானத்தில் தீவிமார குறைபாடுகளை நிபுணர்கள் கண்டறிந்ததால், பாலம் இடிந்தது திட்டமிடப்பட்டதே. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது ஏற்பட்ட இடி மின்னல் காரணமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு: பாலம் இடிந்தது தொடர்பாக நிதிஷ் குமார் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்ச்சித்துள்ளன. பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூன்வல்லா, ஊழல்களின் பாலம் என்று வர்ணித்துள்ளார். மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகுமார் சின்ஹா கூறுகையில்,"இந்த அரசில் அனைத்து விஷயங்களுக்கும் கமிஷன் கேட்கும் மரபு உள்ளது. முதல்வர் நிதிஷ் குமாரிடம் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத மனநிலை காரணமாக நிர்வாகத்தில் அராஜகம் மற்றும் ஊழல் பெருகிவிட்டது. நிர்வாகம் சீர்குலைந்து விட்டது, ஆனால் அவர்கள் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையைப் பற்றி பேசுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஐக்கிய ஜனநாயக தளக்கட்சியைச் சேர்ந்த சுல்தான்கஞ்ச் தொகுதி எம்எல்ஏ லலித் நாராயண மண்டல், இந்த பாலம் நவம்பர் - டிசம்பர் திறக்கப்படும் என்று நாங்கள் எதிர்பர்த்தோம்" என்று தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE