மீண்டும் இதுபோன்ற விபத்து நிகழாது: ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

By செய்திப்பிரிவு

பாலசோர்: மீண்டும் இதுபோன்ற விபத்து நேராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் பாலசோர் அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள கோபால்பூர், கந்தபாரா, பாலசோர், பட்ராக், சோரோ, கட்டாக் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. மறுசீரமைப்புப் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாக விசாரணை நடத்துவோம். மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

மம்தா நேரில் ஆய்வு: சம்பவ இடத்துக்கு நேரில் வந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளைப் பார்வையிட்டார். மேலும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட இருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மாநில அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும். நாங்கள் நேற்று 40 ஆம்புலன்ஸ்களை அனுப்பினோம். இன்று 70 ஆம்புலன்ஸ்களையும் 40 மருத்துவர்களையும் அனுப்பி உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

கடும் நடவடிக்கை தேவை: இதனிடையே, இந்த விபத்துக்குக் காரணமாக இருந்த குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விபத்து தொடர்பாக ஒடிசா அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற விபத்து நிகழக்கூடாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள கட்டாக் மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் கொடுத்துள்ளதாக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஜெயந்த் பாண்டா தெரிவித்துள்ளார். "ரத்த தானம் செய்ய இளைஞர்கள் மிகப் பெரிய ஆர்வத்தைக் காட்டி வருகிறார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்திருக்கிறார்கள். இதுவரை 3000 யூனிட்க்கும் அதிகமாக ரத்தம் பெறப்பட்டுள்ளது" என அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE