ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 31-ம் தேதி மத்தியஅமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் அனுராக் தாக்குர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வளர்ந்த நாடுகளில் தானிய உற்பத்தியைவிட சேமிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவின் ஓராண்டு தானிய உற்பத்தித் திறன் 31 கோடி டன்களாக இருந்தாலும் சேமிப்புத் திறன் 47 சதவீதமாக மட்டுமே உள்ளது.

இதற்கு தீர்வு காண அடுத்த 5 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 7 கோடி டன் தானிய சேமிப்புத் திறனை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு திட்டமாகும்.

முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி ஒவ்வொரு வட்ட அளவில் 2,000 டன் தானியங்களை சேமிக்கும் கிடங்கு அமைக்கப்படும். முதல்கட்ட திட்டத்தில் கிடைக்கும் அனுபவங்களின் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் உருவாக்கப்படும்.

தற்போது நாட்டின் தானிய சேமிப்பு 14.5 கோடி டன்களாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் தானிய சேமிப்பு திறன் 21.5 கோடி டன்களாக அதிகரிக்கும்.

புதிய திட்டத்தின் மூலம் உணவு தானியம் வீணாவது தடுக்கப்படும். நாட்டின் உணவுப் பாதுகாப்பு மேம்படும். விவசாயிகளின் போக்குவரத்து செலவு குறையும். கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு தானியங்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவும் குறையும். கிராமங்களில் வேலைவாய்ப்பை பெருக்கும்.

உலகின் மிகப்பெரிய சேமிப்பு கிடங்கு திட்டத்தை செயல்படுத்த மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

நாடு முழுவதும் ஒரு லட்சத்துக் கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) செயல்படுகின்றன. இவற்றில் 13 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். புதிய திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பயன் பெறுவார்கள். இவ்வாறு அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE