அரூர்: தென்பெண்ணை ஆற்றின் கரையில் மேடான பகுதியில் அரூர் பகுதி அமைந்துள்ளது. கால்வாய் மூலம் ஆற்று நீரைக் கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுவதால், நீரேற்றுதல் மூலம் சுற்றியுள்ள ஏரிகளில் நிரப்பி விவசாயம் செழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் அரூர் பகுதி புலம் பெயர் தொழிலாளர்களை அதிகம் கொண்ட பகுதியாக உள்ளது. போதிய தொழிற்சாலைகளோ வேலை வாய்ப்போ இல்லாத நிலையில் விவசாய கூலிகளாக பெரும்பாலானோர் உள்ளனர். வறட்சிக் காலத்தில் விவசாயம் சார்ந்த பணிகள் இல்லாததால், வேலை தேடி வெளி மாவட்டங்களுக்குச் செல்வது வாடிக்கையாகி விட்டது.
அரூர் நகரை ஒட்டி 10 கிலோ மீட்டர் தொலைவில் தமிழகத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணையாறு ஓடிய போதும், எவ்வித பயனும் பெறாத பகுதியாக உள்ளது. ஏனெனில், தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களைப் பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ள ஆற்றின் பள்ளமான பகுதியில் கிருஷ்ணகிரியும், மேடான பகுதியில் தருமபுரி மாவட்டமும் அமைந்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதியில் கால்வாய்கள் அமைத்து அதன்மூலம் விவசாயம் செய்யப்படுகிறது. ஆனால் தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தென்பெண்ணையாற்று நீர் கானல் நீராகவே உள்ளது.
அரூர் பகுதியில் உள்ள கிராமங்கள் பயன் பெறும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொட்டம்பட்டி அருகில் அமைந்துள்ள வனப்பகுதியில் மதிகெட்டான் கால்வாய் திட்டம் என்ற செனாகல் திட்டம் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து கிடப்பிலேயே இருந்த இத்திட்டத்தை பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தொடர் வலியுறுத்தல் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்தனர்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடினம் எனக் கூறினர். அதாவது, மேடான பகுதியில் அரூர் அமைந்துள்ளதால் நீர் கொண்டு செல்லும் வழிப்பாதை அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கு தீர்வாக தெண்பெண்ணையாற்றின் கீழ்மொரப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தாமலேரிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஆற்றுப்பாலம் அருகில் தடுப்பணை கட்டி அதன் மூலம் மழைக்காலத்தில் பெருக்கெடுத்தோடும் ஆற்று நீரை நீரேற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது.
தடுப்பணை அமைவதற்கான போதிய அமைப்புடன் இப்பகுதி அமைந்துள்ளது. இதன்மூலம் கீழ் மொரப்பூர், மருதிப்பட்டி, வெளாம்பட்டி, வேட்ரப்பட்டி, வடுகப்பட்டி, கொங்க வேம்பு, மாம்பட்டி உள்ளிட்ட 10 ஊராட்சிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 15-க்கும் மேற்பட்ட ஏரிகள் பாசன வசதி பெறுவதுடன் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதியும் பெறும்.
இதுகுறித்து சமூக சேவகர் தேவி மாதேஷ்வரி கூறுகையில், வறட்சியாக காணப்படும் அதேநேரத்தில், வளமிக்க மண்ணைக் கொண்டுள்ள அரூர் பகுதியின் விவசாயத்தை காக்க இந்த நீரேற்றுத்திட்டம் சரியான பலனைக் கொடுக்கும். எடப்பாடி பகுதியில் அதிமுக ஆட்சியின்போது இதேபோல் காவிரியாற்றில் இருந்து நீரேற்றி 100-க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்பியதை உதாரணமாகக் கொண்டு, தாமலேரிப்பட்டியில் இருந்து நீரேற்றுதல் மூலம், 15-க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்ப அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தமிழ் குமரன் கூறும்போது, ஆங்கிலேயர் காலத்தில் இருந்து வலியுறுத்தப்படும் தொட்டம்பட்டி செனாகல் கால்வாய் திட்டத்திற்கு மாற்றாக இந்த நீரேற்றத் திட்டம்மூலம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து 10 ஊராட்சிகளைச் சேர்ந்த ஏரிகளில் நீர் நிரப்பலாம். இதன் மூலம் மானாவாரி நிலங்களை நஞ்சை நிலமாக்கி, விளைபொருட்களையும் அதிகரித்து, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் என அனைவரையும் காக்க அரசு முன்வர வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 hour ago
சுற்றுச்சூழல்
47 mins ago
சுற்றுச்சூழல்
2 hours ago
சுற்றுச்சூழல்
22 hours ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
8 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
10 days ago