வைகை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான மூலவைகையில் வழியோர கிராமங்களின் கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு

By என்.கணேஷ்ராஜ்

கண்டமனூர்: வைகை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான மூலவைகையில் கழிவு நீர் கலப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் ஆறு மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனநீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. இந்த அணைக்கான பிரதான நீர்வரத்து தேனி மாவட்டம் வெள்ளிமலை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. அங்குள்ள அரசரடி, இந்திராநகர், வெள்ளிமலை, புலிகாட்டுஓடை, பொம்முராஜபுரம், காந்திக்கிராமம், வாலிப்பாறை, தும்மக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் ஊற்றுநீர் சிற்றாறுகளாக உருவெடுக்கின்றன.

பின்பு மூலவைகையாகப் பெருக்கெடுத்து மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர் வழியாக குன்னூரில் முல்லைப் பெரியாற்றுடன் இணைந்து வைகை அணைக்குச் செல்கிறது.

கடமலை- மயிலாடும்பாறை ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்கள் மலைப்பாங்கான இடத்தில் அமைந்துள்ளதால் குடிநீருக்கு இந்த ஆற்றையே நம்பி உள்ளன. இதற்காக ஆங்காங்கே உறை கிணறு அமைத்து சுத்திகரிப்புச் செய்து குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன.

இந்நிலையில் ஆற்றின் வழிநெடுகிலும் அமைந்துள்ள பல ஊராட்சிகளைச் சேர்ந்த கிராமங்கள் தங்கள் பகுதி கழிவுநீரை ஆற்றிலேயே கலக்கச் செய்கின்றன. நீர்வரத்து அதிகம் இருக்கும் போது கழிவுகளின் தாக்கம் பெரியளவில் தெரிவதில்லை.

ஆனால், நீர்வரத்து இல்லாத நேரங்களில் துர்நாற்றம் ஏற்படுவதுடன், ஆறும் மாசுபடுகிறது. ஆற்றுப்படுகைகளில் உறை கிணறு அமைக்கப்பட்டுள்ளதால் கழிவுநீர் ஊடுருவும் நிலையும் உள்ளது.

இதே போல் குப்பை உள்ளிட்ட பல்வேறு திடக்கழிவுகளும் ஆற்றில் கொட்டப்படுவதால் மூலவைகை வெகுவாய் மாசுபட்டுள்ளது. வருசநாடு, கடமலைக்குண்டு, அய்யனார்புரம், மயிலாடும்பாறை உள்ளிட்ட பல பகுதிகளிலும் இதன் தாக்கம் அதிகம் உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஆற்று நீரில் கழிவுகள் எளிதாக அடித்துச் செல்லப்படுவதால் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மூல வைகை ஆறு பகுதியிலிருந்து வைகை ஆறு கடலில் கலக்கும் பகுதி வரை வழியோர கிராம ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மதுரை மாநகராட்சி என வேறுபாடின்றி அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களும் விதியை மீறிச் செயல்படுகின்றன.

இதனால், வைகை அணையும், நீரும், ஆறும் மாசுபடுகின்றன. முதலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் நடவடிக்கையை மூலவைகையில் இருந்து தொடங்க வேண்டும். பின்னர் வழியோர கிராமங்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை ஒரே நாளில் செய்துவிட முடியாது.

இதை அரசும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இயக்கங்களும் மாபெரும் இயக்கமாகத் தொடங்க வேண்டும். நீர் மாசை கட்டுப்படுத்த கழிவுநீரை சுத்திகரிப்புச் செய்து அவற்றை முறையாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உள்ளாட்சி அலுவலர்கள் கூறுகையில், `பெரும்பாலும் கரையோர ஆக்கிரமிப்புக் குடியிருப்புகளில் இருந்தே கழிவுநீர் கலக்கிறது அதிக நிதி தேவைப்படுவதால் கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முடிவதில்லை, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

10 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

சுற்றுச்சூழல்

21 days ago

சுற்றுச்சூழல்

22 days ago

சுற்றுச்சூழல்

25 days ago

சுற்றுச்சூழல்

25 days ago

சுற்றுச்சூழல்

27 days ago

சுற்றுச்சூழல்

29 days ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

மேலும்