வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களிடம் இருந்து 2 மாதங்களில் ஒரு லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிப்பு

By செய்திப்பிரிவு

கோவை: வெள்ளியங்கிரி மலைப்பாதையில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதை குறைக்க, பாட்டில்களுக்கு வைப்புத்தொகை பெற்று திரும்ப அளிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த 2 மாதங்களில் பக்தர்களிடம் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை வனத்துறையினர் சேகரித்துள்ளனர்.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் பலர் தாங்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிஸ்கெட், தின் பண்டங்கள் உள்ளிட்டவற்றின் கவர்களை அங்கேயே தூக்கி எறிந்து வந்தனர். இதனால், மலைப்பாதை முழுவதும் கழிவுகள் தேங்கி, அவற்றை அகற்றுவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது.

எனவே, பக்தர்கள் மலையேறும்போது கொண்டுவரும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு வைப்புத்தொகை பெற்றுக்கொண்டு, கீழேவந்து பாட்டிலை திரும்ப அளித்தபிறகு அந்த தொகையை அளிக்கும் திட்டத்தை வெள்ளியங்கிரியில் செயல்படுத்த வேண்டும் என ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.

அதைத்தொடர்ந்து, இத்திட்டத்தை கடந்த பிப்ரவரி 17-ம் தேதி முதல் வனத்துறையினர் அமல்படுத்தினர். அதன்படி, மலை ஏறுவதற்கு முன் பக்தர்கள் எடுத்து வரும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தலா ரூ.20 வைப்புத் தொகையாக பெற்றுக்கொள்ளப்பட்டு, பணம் பெற்றதற்கு அடையாளமாக பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மலையேறி, இறங்கியபிறகு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டிலை அளித்துவிட்டு, வைப்புத்தொகையை பக்தர்கள் திரும்ப பெற்றுக்கொண்டனர்.

இதன்மூலம் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள் மலையில் தேங்குவது தவிர்க்கப்பட்டு, அவை கீழே முறையாக சேகரிக்கப்பட்டு, மறுசுழற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து தற்போதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2 மாதங்களில் பக்தர்களிடம் இருந்து கேரி பேக்குகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மக்காத கழிவுகள் என 8.62 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மறுசுழற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவற்றை ‘ரீ கம்போஸ்’ மறுசுழற்சி நிறுவனத்தைச் சேர்ந்த சரண், பிரசாந்த் ஆகியோர் சேகரித்து மறுசுழற்சிக்கு உதவியுள்ளனர்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE