ஆறுகள் முதல் காடுகள் வரை: சென்னையின் பசுமை, நீர் உட்கட்டமைப்புகள் ஒருங்கிணைப்பு

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் சென்னையின் பசுமை, நீர் உட்கட்டமைப்புகளை ஒருங்கிணைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் விரைவில் தொடங்க உள்ளது.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு 5,904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு இதுவரை 2 முழுமைத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதல் திட்டம் 1976-ம் ஆண்டும், 2-வது முழுமைத் திட்டம் 2006 முதல் 2026 வரையும் அமலில் இருக்கும். இந்த 2-வது முழுமைத் திட்டத்தில்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட், துணைக்கோள் நகரம் உள்ளிட்ட திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

3-வது முழுமைத் திட்டம் (2027 - 2046) தயார் செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி, நகர்புற வளர்ச்சி, போக்குவரத்து மேம்பாடு, உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, கால நிலை மாற்றம், சுற்றுலா, தகவல் தொழில் நுட்பம் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு இந்தத் திட்டம் தயார் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள சென்னையில் உள்ள பசுமை பரப்பு மற்றும் நீர் வழித்தடங்களை ஒருங்கிணைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.

இதன்படி பசுமை உட்கட்டமைப்புகள் என்று அழைக்கப்படும் பூங்காக்கள், மரங்கள், செங்குத்து தோட்டம் ஆகியவற்றையும், நீள உட்கட்டமைப்பு என்று அழைக்கப்படும் மழைநீர், மழைநீர் வடிகால் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் திட்டம் தயார் செய்யப்படவுள்ளது. இதன்படி ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், சதுப்பு நிலங்கள், மரங்கள், பசுமை இடங்கள், பூங்காக்கள், காடுகள் ஆகிவற்றை ஒருங்கிணைத்து பசுமையான சூழலை உருவாக்க இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.

சென்னை பெருநகரில் தற்போது உள்ள பசுமை பரப்பளவு கண்டறிதல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்தல், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஆய்வு செய்தல், எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை பரிந்துரை செய்தல் உள்ளிட்டவை இந்தத் திட்ட அறிக்கை தயார் செய்யும்போது ஆய்வு செய்யப்படவுள்ளன.

இந்த அறிக்கையை 3-வது முழுமைத் திட்டத்தில் இணைத்து வரும் காலங்களில் சென்னையில் பசுமை மற்றும் நீர் உட்கட்டமைப்புகளை உருவாக்குவது மற்றும் பாதுகாப்பது தொடர்பான பணிகளை மேற்கொள்ள சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE