தமிழகத்தில் 3,916 இடங்கள் வெள்ள பாதிப்பு பகுதிகள்: பேரிடர் மேலாண்மை அறிக்கையில் தகவல்

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: தமிழகத்தில் 3,916 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 317 இடங்களில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகம் அடிக்கடி புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் மாநிலமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் புயலை எதிர் கொண்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்கள் வெள்ளம் தேங்கும் பகுதிகளாக மாறி வருகிறது. இதன்படி தமிழகத்தில் 3,916 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் 3,916 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 317 இடங்களில் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது. 719 இடங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களாகவும், 1086 இடங்கள் மிதமான பாதிப்புக்குள்ளாகும் இடங்களாகவும், 1714 இடங்கள் குறைவான பாதிப்புக்குள்ளாகும் இடங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் 3 அடி முதல் 5 அடி வரையிலும், மிதமான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் 2 அடி முதல் 3 அடி வரையிலும், குறைவான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் 2 அடிக்கும் குறைவாக வெள்ள நீர் தேங்கிய பகுதிகள் ஆகும். இதில், அதிகபட்சமாக செங்கல்பட்டில் 389 இடங்களும், சென்னையில் 332 இடங்களும், கடலூரில் 293 இடங்களும், நீலகிரியில் 284 இடங்களும், மயிலாடுதுறையில் 228 இடங்களும் உள்ளன. வாசிக்க > மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டம் - கொள்கையின் முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE