காக்கக் காக்க... கடுகு காக்க!

வி

வசாயத்தில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும், மகசூலை அதிகரிக்க வேண்டும் என்கிற கருத்துகள் ஆட்சியாளர்களிடமிருந்து அடிக்கடி வெளிப்படும். இவற்றைச் சாத்தியப்படுத்த, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்களை விளைவிக்க வேண்டும் என்பது அரசின் செயல்திட்டங்களில் ஒன்று!

அந்த வகையில் அரிசி, பருப்பு உட்பட 21 பொருட்களை மரபணு மாற்றம் செய்ய வேண்டும் என்ற இலக்கு இந்தியாவில் உள்ளது. அதன் முதல் படியாக 2002-ம் ஆண்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி, அரசு அனுமதியோடு இந்தியாவில் புகுந்தது. தொடர்ந்து, விளைபொருளின் விதையை மரபணு மாற்றம் செய்வதால் எதிர்கொள்ளப் போகும் தீமைகள் அதிகம் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன.

கடும் எதிர்ப்புக்கு இடையே 2010-ம் ஆண்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை அறிமுகம் செய்ய மத்திய அரசு முயற்சித்தது. ஆனால், போராட்டங்களுக்குப் பிறகு அப்போதைய காங்கிரஸ் அரசு அதற்கு தற்காலிகத் தடை விதித்தது. இப்போது மீண்டும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு மத்திய அரசின் ‘மரபணுப் பொறியியல் அனுமதிக் குழு’ பச்சைக்கொடி காட்டியிருக்கிறது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இந்த மாதம் விசாரணைக்கு வர உள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டால், இதுவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட உலகின் முதல் மனிதர்கள் உண்ணும் உணவுப் பயிராக இருக்கும்.

கடுகு காக்கப் பயணம்

இந்நிலையில், மரபணு மாற்றக் கடுகுக்கு எதிராக இயற்கை ஆர்வலர்கள், சூழலியாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் ‘செம்மை’ அமைப்பு ‘கடுகுப் பயணம்’ என்ற பெயரில் தொடர் பயணம் ஒன்றை ஒருங்கிணைத்து வருகிறது. இந்தக் கடுகுப் பயணத்தின் நோக்கம் என்ன?

SENTHAMILAN செந்தமிழன் right

“மரபணு மாற்றுக் கடுகு விதைகள் நடைமுறைக்கு வரும்முன், நாட்டுக் கடுகு விதைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரப்பிவிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய செயல்திட்டம். இதற்காக, சுமார் 1,000 கிலோ கடுகு விதைகளுடன் பயணம் புறப்பட்டுள்ளோம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, உணவுப் பயிரில் மரபணு மாற்ற விதைகளை அனுமதிப்பது இதுவே முதல்முறை. காங்கிரஸ் அரசு கத்தரிக்காயில் மரபணு மாற்றம் செய்ய அனுமதி வழங்க முயற்சித்தது. இன்றைய பா.ஜ.க. அரசு கடுகு விதைகளில் மரபணு மாற்றத்தைத் திணிக்க வலிந்து முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே நிலங்களிலும் பயிர்களிலும் கொட்டப்படும் வேதிப்பொருட்களால் மக்கள் அனுபவிக்கும் நோய்களை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது விதைகளிலேயே மரபணுவை மாற்றிவிட்டால், வருங்கால சந்ததியினர் உண்பதற்கு ஒருபிடி நல்ல உணவும் இருக்காது. அதைத் தடுத்து நம் உணவைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் கடுகுப் பயணத்தின் நோக்கம்” என்கிறார் செம்மை அமைப்பின் ம. செந்தமிழன்.

பறிபோகும் விதை உரிமை

பொதுவாக விளைவிக்கும் பொருளிலிருந்தே அடுத்த பட்டத்துக்கான விதைகள் விவசாயிகளுக்குக் கிடைத்துவிடும். இதுதான் விவசாயத்தின் அடிப்படை. ஆனால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதையை ஒரு முறை பயன்படுத்தி விவசாயி உற்பத்தி செய்தால், திரும்பவும் அவருக்கு விதை கிடைக்காது. விதையை மீண்டும் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். விதைகள் அனைத்தும் பெருநிறுவனங்களின் கையில் இருக்கும்.

விதைக்கு அவர்கள் வைப்பதுதான் விலையாக இருக்கும். மரபணு மாற்ற விதைகளை அனுமதித்தால், விதைகளின் மீதான நமது உரிமை பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கைமாற்றப்பட்டுவிடும் என்று எச்சரிக்கிறார் கடுகுப் பயணத்தின் ஒருங்கிணைப்பாளர் ப. கலாநிதி.

kalanithi கலாநிதி

“எங்களுடைய எதிர்ப்பு ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடுகுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் 17-ல் இந்தப் பயணத்தைத் தொடங்கினோம். தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் 21 இடங்களுக்கு இந்தக் கடுகுப் பயணம் செல்லும். பெங்களூருவில் இந்தப் பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறோம்.

செல்லும் இடங்களில் எல்லாம் விவசாயிகள், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், வீட்டுப் புழக்கடைத் தோட்டம் வைத்திருப்பவர்கள் எனப் பலரையும் சந்தித்து நாட்டுக் கடுகு விதைகளை வழங்குகிறோம். அதை எப்படி வளர்க்க வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறோம். விளையும் ஆரோக்கியமான கடுகை அவர்களே பயன்படுத்திக்கொள்ளலாம்.

மற்றவர்களுக்கும் கொடுக்கலாம். இது கடுகுக்கான பயணம் மட்டுமல்ல, நாட்டு விதைகள் நம் மண்ணில் பெருக வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் முழுமையான நோக்கம்” என்கிறார் ப. கலாநிதி.

இந்தக் கடுகுப் பயணம் உரிய இலக்கை எட்டும்பட்சத்தில் நல்ல மாற்றங்கள் நிகழும். ஏனென்றால், அதி ‘காரம்’ மிக்கதல்லவா கடுகு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE