சென்னை: ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80,567 ஹெக்டேர் வனப்பரப்பில் “தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்” என்னும் புதிய சரணாலயத்தை அரசு ஏற்படுத்தும் என்றும், இது மாநிலத்தின் 18-வது வனவிலங்கு சரணாலயமாக இருக்கும் என்றும் தமிழக பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து, பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் சில முக்கிய அம்சங்கள்:
நீர் வளங்கள்: நீர்நிலைகளை மீட்டெடுத்து, புத்துயிர் அளிக்க பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் ரூ. 462 கோடி மதிப்பீட்டில் 341 ஏரிகள், 67 அணைக்கட்டுகள், 11 கால்வாய்களை புனரமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 259 கோடி மதிப்பீட்டில் 309 ஏரிகளில் பழுதுபார்த்தல், புனரமைத்தல், மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் ரூ. 184 கோடி மதிப்பீட்டில் நீண்டகால வெள்ளத் தணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒன்பது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இரண்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. நடப்பாண்டில் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 12 வெள்ளத் தணிப்புப் பணிகள் ரூ. 434 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு, முடியும் தருவாயில் உள்ளன.
கால்நடைப் பராமரிப்பு: முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், மாநிலத்தில் விலங்குகளின் நலனைப் பேணிக்காக்க மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பெருகிவரும் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டு மையங்கள் அமைப்பது அவசியமாகும். விலங்குகள் நல வாரியத்தை வலுப்படுத்தி செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு, இம்மதிப்பீட்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளவும், உள்ளாட்சிகளின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும், விலங்குகள் நலப்பணிகளைச் செயல்படுத்தவும் இந்நிதி பயன்படுத்தப்படும்.
மீனவர் நலன்: மீனவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள இந்த அரசு அவர்களது சிறப்புத் தேவைகளை நன்கு உணர்ந்து பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மீன்பிடி குறைவு காலத்தில் மீனவர்கள் பயன்பெறும் பொருட்டு ரூ. 5,000 என வழங்கி வந்த சிறப்பு நிவாரணத் தொகையினை ரூ. 6,000 ஆக கடந்த ஆண்டு முதல் இவ்வரசு உயர்த்தி வழங்கி வருகிறது. வரும் நிதியாண்டில் மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணம், மீன்பிடித் தடைக்கால நிவாரணம், மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டங்கள் என 4.3 இலட்சம் மீனவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 389 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பவளப்பாறைகள் மீன்களுக்கு புகலிடம், உணவு அளித்து மீன்குஞ்சுகள் பிழைக்கும் வாய்ப்புகளை அதிகரித்து மீன்வளத்தைப் பாதுகாக்கின்றன. நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட, பாக் வளைகுடா பகுதியில் 3 மாவட்டங்களில் கடற்பகுதியில் 217 செயற்கை பவளப்பாறை அலகுகள் 79 கோடி ரூபாயிலும், பாக் வளைகுடா தவிர ஏனைய மாவட்டங்களில் 200 செயற்கை பவளப்பாறை அலகுகள் 64 கோடி ரூபாயிலும் ஒன்றிய மாநில நிதியுதவியுடன் அமைக்கப்படும்.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம்: பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தாலும், மக்கள்தொகைப் பெருக்கத்தாலும் கடலோர சுற்றுச்சூழலும், கடலோர மக்களின் வாழ்வாதாரமும் வருங்காலங்களில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். கடல் அரிப்பைத் தடுக்கவும், கடல் மாசுபாட்டைக் குறைக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ என்ற திட்டத்தை 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த அரசு செயல்படுத்த உள்ளது.
அழிந்து வரும் வன உயிரினங்களைக் காக்க ஒரு தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வனப்பரப்பு அவசியம். எனவே, நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை, தென்காவிரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80,567 ஹெக்டேர் வனப்பரப்பில் “தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்” என்னும் புதிய சரணாலயத்தை இந்த அரசு ஏற்படுத்தும். இது மாநிலத்தின் 18வது வனவிலங்கு சரணாலயமாகும்.
மத்திய ஆசியாவின் பறவைகள் வலசைப் பாதையில் தமிழ்நாடு அமைந்துள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் பெரும் எண்ணிக்கையில் பறவைகள் நமது மாநிலத்திற்கு வருகை தருகின்றன. பறவைகளின் பாதுகாப்பைப் பேணவும், பறவையியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், இயற்கையில் பறவைகளின் பங்கைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், மரக்காணத்தில் ரூ. 25 கோடி செலவில் “பன்னாட்டுப் பறவைகள் மையத்தை” அரசு அமைக்கவுள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மகளிரின் முக்கியப் பங்கை உணர்ந்துள்ள இந்த அரசு, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மூலம் "காலநிலை மாற்ற வீராங்கனைகள்” என்ற காலநிலை விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கும். சுற்றுச்சூழல், காலநிலைமாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக முதற்கட்டமாக 500 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இந்த சுற்றுச்சூழல் பற்றிய பரப்புரையை முன்னெடுப்பார்கள். இதற்காக, அவர்களுக்கு ரூ. 20 கோடி செலவில் மின் ஆட்டோக்கள் வழங்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்டத்தில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறைக்கு ரூ. 1,248 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
9 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
10 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
19 days ago