கோவை: வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமாக நிலம் சார்ந்த பறவைகள் கணக்கெடுப்பு கடந்த 4,5-ம் தேதிகளில் கோவை வனக்கோட்டத்தில் உள்ள 7 வனச்சரகங்களில் நடைபெற்றது.
மொத்தம் 20 குழுக்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டன. இதில் வனப்பணியாளர்கள் 50 பேர், கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டி (சிஎன்எஸ்), இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (டிஎன்பிஎஸ்), டபிள்யுடபிள்யுஎஃப் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் 64 பேர் ஈடுபட்டனர்.
இதில், மொத்தம் 204 வகை பறவைகள் தென்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் கூறியதாவது: பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை, கோவை, போளுவாம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகங்களுக்கு உட்பட்ட 20 இடங்களில் கணக்கெடுப்பு நடைபெற்றது.
இதில், காப்புக்காடுகள் தவிர்த்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகம், ஐஓபி காலனி, கலங்கல், பச்சாபாளையம் புல்வெளிபரப்பு ஆகிய இடங்களிலும் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
இதில், பெரிய பச்சைப்புறா, கல் கவுதாரி, சுண்டங்கோழி, நீண்டவால் பக்கி, வெண்பிட்ட முள்வால் உழவாரன், கொண்டை உழவாரன், கரும்பருந்து, கொம்பன் ஆந்தை, பொரிப்புள்ளி ஆந்தை, பெரிய அலகு மீன்கொத்தி, சிவப்பு வல்லூறு, செந்தலை வல்லூறு, கருந்தலை குயில் கீச்சான், மலைச்சிட்டான், சோலைப்பாடி, சீகார்ப் பூங்குருவி, காட்டு வாலாட்டி உள்ளிட்ட 204 வகை பறவைகள் தென்பட்டன. இதில், சிறுமுகை, போளுவாம்பட்டி வனச்சரகங்களில் அதிக வகை பறவைகள் காணப்பட்டன.
காண்பதற்கு அரிய பறவைகள்: கணக்கெடுப்பின்போது தென்பட்ட சிறிய மீன் கழுகு, மலபார் இருவாச்சி, வெண்பிடரி மரங்கொத்தி, வேட்டையாடி வல்லூறு, பெரிய குயில் கீச்சான், செந்தலை பூங்குருவி ஆகியவை இங்கேயே வாழும் பறவைகள் என்றாலும், எண்ணிக்கையில் மிகக் குறைவாக உள்ளன. இவற்றை பார்ப்பது என்பது அரிது.
இதில், சிறிய மீன் கழுகு என்பது ஆற்றோரங்களில் இருக்கும். இரைகொல்லி பறவையான இது, மீன்களை முக்கிய உணவாக உட்கொள்ளும். கணக்கெடுப்பின் முடிவுகள் தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மேலும், இந்த முடிவுகள் பொதுமக்களிடையே பறவைகளின் இயற்கை வாழிடத்தை காப்பதன் முக்கியத்தும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
பறவைக்கு உதவும் எறும்புகள்: கணக்கெடுப்பின்போது தென்பட்ட கருஞ்சிவப்பு மரங்கொத்தியானது பூச்சிகள், எறும்புகளை உணவாக உண்ணும் இயல்புடையது. இனப்பெருக்க காலத்தில் இந்த பறவை, எறும்புகள் கட்டிய கூட்டில் முட்டை வைத்து குஞ்சு பொறிக்கும். அந்த குறிப்பிட்ட காலத்தில் மட்டும் எறும்புகளை இந்த பறவைகள் தொந்தரவு செய்யாது. அதேபோல, இந்த பறவைகளை எறும்புகளும் தொந்தரவு செய்யாது என்பது ஆச்சரியம் அளிப்பது ஆகும்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
18 days ago
சுற்றுச்சூழல்
23 days ago
சுற்றுச்சூழல்
25 days ago