காற்று மாசு முதல் சுகாதார கேடு வரை: வட சென்னை அனல் மின் நிலைய சாம்பல் கழிவு பாதிப்பை ஆய்வு செய்ய முடிவு

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: வட சென்னை அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகளால் பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு உள்ளடக்கிய கழிமுகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, எண்ணூர் பகுதியைச் சேர்ந்த ரவிமாறன் கடந்த 2016-ல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில், தமிழக திட்டக் குழு முன்னாள் துணைத் தலைவரான சாந்த ஷீலா நாயர் தலைமையில், சென்னை ஐஐடி பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன், இந்துமதி நம்பி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் தாவரவியல் பேராசிரியர் நரசிம்மன், கேர் எர்த் அமைப்பைச் சேர்ந்த ஜெய வெங்கடேசன், கடல்சார் உயிரியல் நிபுணர், தமிழக சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மத்திய - மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதிகள் அடங்கிய வல்லுநர் குழுவை பசுமை தீர்ப்பாயம் அமைத்தது.

இக்குழு, எண்ணூர் கழிமுகத்தில் சாம்பல் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து விரிவான திட்ட அறிக்கையை சமர்பித்தது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பில் 6 மாதத்தில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்து 9 மாதத்தில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால் 6 மாதத்தில் இதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.

இதற்கிடையில் இந்த பணிகளை மேற்கொள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐஐடி உள்ளிட்ட 2 அமைப்புகளிடம் கோரிக்கைகள் பெறப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக இது நிராகரிக்கப்பட்டது. தற்போது மிகவும் காலதாமதமாக இந்த திட்ட அறிக்கை தயார் செய்யம் பணிக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

இந்நிலையில், சாம்பல் கழிவுகளால் பாதிக்கப்பட்ட கழிமுகங்களை மீட்டு எடுப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி வட சென்னை அனல் மின் நிலை சாம்பல் கழிவுகளால் கொசஸ்தலை ஆறு, எண்ணூர் கழிமுகம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, சாம்பல் கழிவுகளை அப்புறப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, மீட்டு எடுக்க செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், அந்தப் பகுதி மக்களுக்கு இதன் காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதாரக் கேடு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE