புதிய தொழிற்சாலைகள் அமைத்தால் மணலி தாங்குமா? - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு 

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: மணலியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க முடியுமா என்பது தொடர்பாக மாசுக்களின் நிலையை சென்னை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்யவுள்ளது.

எண்ணூர் மற்றும் மணலி பகுதியில் இயங்கி வரும் வட சென்னை அனல்மின் நிலையம், வல்லூர் அனல்மின் நிலையம், சிபிசிஎல், தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ், மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ், மெட்ராஸ் பெர்ட்டிலைசர் உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகளால் அதிக அளவு மாசு ஏற்படுகிறது.

இந்நிலையில், வடசென்னையில் அமைந்துள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன? புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அப்பகுதியின் தாங்கு திறன் என்ன என்பது குறித்து ஆராய நிபுணர் குழு ஒன்று பசுமை தீர்ப்பாயம் அமைத்தது.

புதிய தொழிற்சாலைகள் அமைத்தால் மணலி தாங்குமா என்பதை ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி மணலியில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் ஆய்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி காற்று மாசு, நீர் மாசு, நிலம் மாசு, ஒலி மாசு உள்ளிட்ட 4 மாசுக்களின் நிலை ஆய்வு செய்யப்படவுள்ளது.

காற்று மாசு: மணலி பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் ஏற்படும் மாசு, விதிமுறைகளின் படி எந்த அளவுக்கு காற்று மாசை குறைக்க வேண்டும். சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவற்றின் அளவு உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்படவுள்ளது. மேலும், காற்று மாசை குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

நீர் மாசு: மணலி பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு தேவையான தண்ணீர், தற்போது எந்த அளவு தண்ணீர் உள்ளது. நீர் வளத்தை மேம்படுத்த செய்ய வேண்டிய திட்டங்கள், நிலத்தடி நீரின் தரம் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்படவுள்ளது.

நிலம் மாசு: மணலி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையின் அளவு, குப்பை மறு சுழற்சி உள்ளிட்டவைகளுக்கான மேலாண்மை திட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

ஒலி மாசு: மணலி பகுதியில் எதன் காரணமாக அதிக அளவு ஒலி எற்படுகிறது. தொழிற்சாலைகள் இயக்கம், கட்டுமான பணிகள், போக்குவரத்து போன்ற செயல்பாடுகளில் எதில் இருந்த அதிக அளவு ஒலி ஏற்படுகிறது என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில் இந்த பகுதியில் மேலும் தொழிற்சாலைகள் அமைக்கலாமா வேண்டமா என்று முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE