பிளாஸ்டிக், இறைச்சிக் கழிவால் பாழ்படும் கிருஷ்ணகிரி சின்ன ஏரியை சீரமைக்க கோரிக்கை

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: பிளாஸ்டிக், இறைச்சிக் கழிவால் பாழ்படும் கிருஷ்ணகிரி சின்ன ஏரியைத் தூர்வாரி சீரமைத்து, படகு இல்லம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே 16 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து சின்ன ஏரி உள்ளது. ஏரிக்கு மழைக்காலங்களில் அருகில் உள்ள மலையிலிருந்தும், நகரப் பகுதியில் உள்ள கால்வாய் வழியாகவும் மழை நீர்வரத்து இருக்கும்.

பாசனம்..குடிநீர்: கடந்த காலங்களில் ஆண்டு முழுவதும் ஏரியில் நீர் நிரம்பியிருக்கும். மேலும், இந்த ஏரி நிரம்பி உபரிநீர் கால்வாய் வழியாக பாப்பாரப்பட்டி ஏரிக்குச் செல்லும். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெற்றன. தற்போது, பழையப்பேட்டை பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்துக்கும் ஆதாரமாகச் சின்ன ஏரி விளங்கி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏரியைத் தூர்வாரி, நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பணிகள் தொடக்கம்: இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏரியில் படகு இல்லம் அமைக்க அறிவிப்பு வெளியானது. மேலும், ரூ.3.36 கோடி மதிப்பில் ஏரியை புனரமைத்து நடைப் பயிற்சி பாதை, இருக்கைகள், மின்விளக்குகளுடன் கூடிய படகு இல்லம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது.

கடந்த 2021 டிசம்பர் 29-ம் தேதி ஏரி புனரமைப்புப் பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். நடைப் பயிற்சி பாதை அமைக்கும் பணி தொடங்கியது. மேலும், ஏரியில் உள்ள முட்புதர்கள் மற்றும் ஏரியை ஆக்கிரமித்திருந்த ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் நடந்தன.

திரும்பப் பெறப்பட்ட நிதி: இதனிடையே, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகள் நடைபெறாததால், புனரமைப்புப் பணிக்கான நிதியை அரசு திரும்பப் பெற்றது. இதனால், தொடக்க நிலையிலேயே பணி நின்றது. இந்நிலையில், மீண்டும் ஏரியைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: சின்ன ஏரியில் தற்போது, இறைச்சிக் கழிவுகள், குப்பை அதிகளவில் கொட்டப்படுகின்றன. ஏரி முழுவதும் ஆகாயத் தாமரை ஆக்கிரமித்து நீர் மாசடைந்துள்ளது. எனவே, சின்ன ஏரியை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE