திருவண்ணாமலை மாவட்டத்தில் மூடுபனி: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மூடுபனியின் தாக்கம் நேற்று அதிகம் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

மார்கழி மாதம் முடிந்து தை மாதம் தொடங்கியது முதல் மூடுபனியின் தாக்கம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகம் உள்ளது. ஓரிரு நாட்கள் மழை பெய்தபோது, சற்று தனிந்திருந்த மூடுபனியின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. பனிப் பொழிவானது, இரவு 10 மணிக்கு பிறகு மிதமாக உள்ளது.

அதிகாலை 4 மணிக்கு பிறகு பனிப் பொழிவு அதிகரிக்கிறது. இதனால், சூரிய உதயத்துக்கு பிறகும், வெண்மை நிறத்தில் சாலைகள் உள்ளன. திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர், போளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சாலைகள், விவசாய நிலங்களில் பனி படர்ந்து இருந்தன.

இதனால், சாலைகளில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்கின்றனர். முகப்பு விளக்குகளை எரியவிட்டும், ஒலி எழுப்பியும், மிதமான வேகத்தில் வாகனங்களை ஓட்டுநர்கள் இயக்குகின்றனர். மக்களின் நடமாட்டமும் குறைந்தது. நடைபயிற்சிக்கு செல்பவர்களில் பலரும், தங்களது நடைபயிற்சியை மேற்கொள்ளவில்லை.

மூடுபனியின் தாக்கம் காலை 8 மணிக்கு பிறகு குறைந்தது. இதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE