கோவை | காட்டுப் பன்றிகளின் ஊடுருவலை தடுக்க பாக்குத்தோப்புகளில் நைலான் வலையால் வேலி அமைக்கும் விவசாயிகள்

By செய்திப்பிரிவு

கோவை: மேட்டுப்பாளையம் அருகே, காட்டுப் பன்றிகளின் தாக்குதலைத் தடுக்க பாக்குத் தோப்புகளில் நைலான் நூல் வேலிகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் பாக்கு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் விளையும் பாக்குகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, பாக்கு மரங்களை குறிவைத்து, இரவு நேரங்களில் தோப்புகளுக்குள் நுழையும் காட்டுப்பன்றிகள், மண்ணை பறித்து, மரங்களின் வேர் பகுதியை தின்று மரங்களுக்கு தொடர் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இதனால் மரம் பட்டுப்போய் பாக்கு விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க பாக்குத் தோப்பை சுற்றிலும் நைலான் வலைகளால் ஆன வேலிகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, ‘‘பாக்கு மரங்களால் பலன் பெற ஐந்தாண்டுகள் காத்திருக்கும் எங்களுக்கு காட்டுப்பன்றிகளின் ஊடுருவல் கடும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தற்போது பாக்கு தோப்பை சுற்றி நைலான் வலைகளால் ஆன வேலிகளை அமைத்துள்ளோம். இந்த வேலிகளை கடக்க முயன்றால் காட்டுப்பன்றிகளின் கால்கள் வலையில் சிக்கிக்கொள்ளும்.

இதனால் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் ஊடுருவும் முயற்சி பெருமளவு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அதேசமயம் பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தாக்குதலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE