ஓசூர் அருகே ஏரியில் யானைகள் உற்சாக குளியல்: வேடிக்கை பார்க்க திரண்ட மக்கள்

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் அருகே கர்னூர் ஏரியில் யானைகள் உற்சாகமாகக் குளித்தன. இதை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்தனர்.

தளி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைக் கூட்டத்திலிருந்து சில யானைகள் தனியாகப் பிரிந்து பல்வேறுபகுதிகளில் சுற்றி வருகின்றன. மேலும், விளை நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

கடந்த 2நாட்களுக்கு முன்னர் தளி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 5 யானைகள் ஓசூர் அடுத்த மத்திகிரியில் உள்ள கால்நடை பண்ணையில் தஞ்சம் அடைந்தன. இந்நிலையில், கால்நடை பண்ணையிலிருந்து 3 யானைகள் தனியாகப் பிரிந்து ஓசூர் அருகே கர்னூர் ஏரிக்குள் சென்று உற்சாக குளியல் போட்டன.

இந்த ஏரிக்குக் கடந்த10 ஆண்டுகளுக்குப் பின்னர் யானைகள் வந்துள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் யானைகளை ஆர்வமுடன் வேடிக்கை பார்த்தனர். இதனிடையே, ஏரியில் உள்ள யானைகள் ஊருக்குள்நுழையாமல் தடுக்க வனச்சரகர் ரவி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “இரவு நேரத்தில் ஏரி மற்றும் கால்நடை பண்ணையில் தஞ்சம் அடைந்துள்ள யானைகளை வனப்பகுதிக்கு இடம் பெயரச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE