தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவு கலப்பால் மாசடையும் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நீர்

By செய்திப்பிரிவு

ஓசூர்: தென்பெண்ணை ஆற்றில் கலக்கும்ரசாயன கழிவு நீரால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நீர் மாசடைந்துள்ளது. இதனால், நீர்வளம், மண்வளம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில்(நந்தி துர்க்கம்) பெண்ணை ஆறாக உற்பத்தியாகி கர்நாடகாவில் 112 கிமீ தூரம் பயணித்து பெங்களூரு வழியாக தமிழக எல்லையான கொடியாளம் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையை தென்பெண்ணை ஆறு அடைகிறது.

தென்னிந்தியாவில் முக்கிய ஆறு: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 180 கிமீ தூரம் பயணித்து இறுதியாகக் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தென்னிந்தியாவில் முக்கியமான ஆறுகளில் இதுவும் ஒன்று. தமிழகத்தில் இந்த ஆற்றின் குறுக்கே ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை உள்ளிட்ட 8 இடங்களில் அணைகள் மற்றும் தடுப்பணைகள் உள்ளன. இதன் மூலம் 6 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

துர்நாற்றம் வீசும் நீர்: இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக கெலவரப்பள்ளி அணை நீர் மாசடைந்து, பச்சை நிறமாக மாறி நீர் தேக்கப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. தற்போது, தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து குறைந்த நிலையில், ரசாயன கழிவுநீர் மட்டும் அணைக்கு வருகிறது.

விளைநிலம் பாதிப்பு: அணையிலிருந்து பாசனத்துக்கு திறந்துவிடப்படும் நீர் நுரைபொங்க கால்வாயில் செல்வதால், இதன்மூலம் பாசனம் பெறும் விளைநிலத்தில் மண்ணின் தன்மை மாசடைவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக கெலவரப்பள்ளி அணை பாசன விவசாயிகள் கூறியதாவது: தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவு நீர் கலப்பதால் கெலவரப்பள்ளி அணை நீர் மாசடைந்துள்ளது. இதுதொடர்பாக பல முறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை.

ஆய்வும்...பரிசோதனையும்: கடந்த ஓராண்டுக்கு முன்னர் தமிழக மற்றும் கர்நாடக மாநில அதிகாரிகள் கூட்டாக அணையை ஆய்வு செய்தனர். மேலும், அணை நீரைப் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். அதன்பின்னர் இதுவரை நடவடிக்கையில்லை. மாசடைந்த நீர் பாசன கால் வாயில் செல்லும்போது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் நீரைப் பருகி வருகின்றன. இதனால், கால்நடைகளுக்கு நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

அலட்சியம் வேண்டாம்: பால் தரும் பசுக்கள் இத்தண்ணீரை அருந்துவது மூலம் கிடைக்கும் பாலை பருகும் மனிதர்களுக்கும் நோய் தாக்கும் அபாயம்உள்ளது. இப்பிரச்சினையில் தமிழக-கர்நாடக மாநில அரசுகள்அலட்சியம் காட்டாமல் தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து நீர்வளத்தையும், மண் வளத்தையும் காக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஓராண்டுக்கு முன்னர் தமிழக மற்றும் கர்நாடக மாநில அதிகாரிகள் கூட்டாக அணையை ஆய்வு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE