திருப்பூர் | வனத்துறையிடம் மான் குட்டி ஒப்படைப்பு

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளை ஒட்டிய வனப்பகுதியில் ஏராளமான மான், மயில் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.

இவை உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வெளியே வரும்போது, வாகனங்களில் அடிபட்டும், நாய்களிடம் சிக்கியும் உயிரிழப்பது தொடர் கதையாக உள்ளது. அவிநாசி அருகே அ.குரும்ப பாளையத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி என்பவரது தோட்டப் பகுதியில் மான் குட்டி, நாய்களிடம் சிக்கியது.

இதைக்கண்ட பெரியசாமி உள்ளிட்டோர் நாய்களிடம் இருந்து, எவ்வித காயமுமின்றி மான் குட்டியை மீட்டனர். அதற்கு தண்ணீர், உணவு கொடுத்து பாதுகாப்பாக பெரியசாமி வைத்திருந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், மான் குட்டியை மீட்டு வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, ‘‘பிடிபட்ட ஆண் மானுக்கு, 2 மாதமே இருக்கும். காயங்கள் ஏதும் இல்லாததால், வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE