பாலக்கோடு அருகில் அச்சுறுத்திய யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

By செய்திப்பிரிவு

தருமபுரி: ஈச்சம்பள்ளி பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடித்து, ஆனைமலை யானைகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டாரப் பகுதிகளான சீரியம்பட்டி, ஈச்சம்பள்ளம், சோமனஹள்ளி, பாப்பாரப்பட்டி, காட்டம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விளை நிலங்களில் இரண்டு யானைகள் புகுந்து கரும்பு, ராகி, சோளம், நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்தன. மக்களை அச்சப்படுத்தி, பயிர்களை சேதப்படுத்தும் யானைகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, ஆனைமலை யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை இரண்டு நாட்களுக்கு முன்னர் பாப்பாரப்பட்டி பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. இதன் துணையோடு யானைகளை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கினர். மூன்றாவது நாளான நேற்று பாப்பாரப்பட்டி அருகே பெரியூர் ஈச்சம்பள்ளம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு யானைகளில் ஒரு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

இதில் மயக்கம் அடைந்த யானையை கும்கி யானை உதவியுடன் கிரேன் மூலம் தூக்கி தயாராக உள்ள வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர். பிடிபட்ட யானை, ஆனைமலை யானைகள் முகாமில் விடப்படும். தப்பிச் சென்ற மற்றொரு யானை, ஓரிரு நாளில் பிடிக்கப்படும். அதனால், இப்பகுதி மக்கள் யானை குறித்த அச்சத்தில் இருந்து விரைவில் விடுபடுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE