பரமத்திவேலூர் அருகே சுற்றித் திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே இருக்கூர் கிராமத்தில் சுற்றித் திரியும் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க, கண்காணிப்பு கேமரா மற்றும் வனச்சரகர் அடங்கிய 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது, என வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.

பரமத்திவேலூர் அருகே இருக்கூர் செஞ்சுடையாம்பாளையத்தில் கடந்த சில நாட்களாக மர்ம விலங்குகள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். கடந்த 31-ம் தேதி அக்கிராமத்தைச் சேர்ந்த செந்தில் ராஜா என்பவரது தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை மர்ம விலங்கு கொன்றது.

அதுபோல, இரு நாட்களுக்கு முன்னர் அக்கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் வளர்ப்பு நாயை மர்ம விலங்கு கொன்றது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும், மர்ம விலங்கைப் பிடிக்க வலியுறுத்தி, நேற்று முன்தினம் இருக்கூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே, வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் இருக்கூர் கிராமத்தில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: இருக்கூர் கிராமத்தில் கடந்த 3-ம் தேதி வளர்ப்பு நாயை மர்ம விலங்கு கடித்துத் தின்றுள்ளது.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக மர்ம விலங்கின் கால்தடம் ஆய்வு செய்யப்பட்டதில், சிறுத்தை என்பது தெரியவந்துள்ளது. மேலும், இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தானியங்கி கண்காணிப்புக் கேமரா அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல, விவசாய தோட்டங்களில் சிறுத்தை பதுங்கியுள்ளதா என்பதையும் கண்டறிய ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக எந்த பதிவும் இல்லை.

வனச்சரகர், வன அலுவலர் அடங்கிய 40 பேர் கொண்ட குழு அமைத்துக் கண்காணிப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது கால்நடைகளை மாலை நேரங்களில் பட்டியில் அடைக்கவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. விரைவில் சிறுத்தை பிடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஆர்.ஷஷாந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE