கோவை வனப்பகுதிகளில் பராமரிப்பின்றி காணப்படும் தண்ணீர் தொட்டிகள்

By செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை முறையாக பராமரிக்கவும், தேவையான இடங்களில் கூடுதலாக தண்ணீர் தொட்டிகளை கட்டவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை வனச்சரக பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதை தடுக்கும் நோக்கில் வனப்பகுதிக்குள் ஆங்காங்கே சுமார் 32 இடங்களில் வனத்துறையினர் தண்ணீர் தொட்டிகளை கட்டியுள்ளனர். பெரும்பாலான தொட்டிகள் போதிய பராமரிப்பின்றி உள்ளன. மோட்டார்கள் பழுதானதால், தொட்டிகள் நீரின்றி காலியாகவே உள்ளன.

இது குறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது: காட்டுக்குள் இயற்கையாய் அமைந்துள்ள வனக்குட்டைகளில் மான்கள், காட்டெருமைகள், காட்டுப் பன்றிகள், செந்நாய்கள் இன்னும் பிற விலங்குகள் நீர் அருந்திச் செல்கின்றன. பொதுவாக யானைகள் சுத்தமான நீரை மட்டுமே குடிக்கும் தன்மையுடையது.

பிற விலங்குகளின் உமிழ்நீர், சிறுநீர் குட்டை நீரில் கலப்பதால், யானைகள் குட்டை நீரை குடிக்காமல், தூய்மையான நீரைத் தேடி வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளை நம்பியே யானைகள் வருகின்றன. ஆனால் வனத்தொட்டிகளில் தண்ணீர் இல்லாததால், அருகில் உள்ள ஊர்களுக்குள் யானைகள் புகுந்து விடுகின்றன.

கோடை காலத்தில் யானை-மனித மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் வனத்துக்குள் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள தொட்டிகளை சரியாக பராமரித்து, தினசரி இரு முறை தூய்மையான நீர் நிரப்பப்படுவதை வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE