வன விலங்குகளுக்கு உணவு கொடுத்தால் என்ன நடக்கும்? - ஐஎஃப்எஸ் அதிகாரியின் விழிப்புணர்வு வீடியோ

By செய்திப்பிரிவு

ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தாவின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். காரணம், வன விலங்குகளின் அழகை கச்சிதமாக படம்பிடிப்பது மட்டுமல்ல, அதைத் தாண்டி வன உயிரினங்கள் பற்றி நமக்கு அடிப்படை விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அவரது வீடியோக்கள் வைரலாவதற்கு முக்கியக் காரணம்.

இன்று (ஜன.10) அவர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் வனத்தின் ஊடே அமைக்கப்பட்ட தார் சாலையை ஒரு யானை செவ்வனே கடக்கிறது. இப்போதெல்லாம் யானை, சிறுத்தை, மான், காட்டெருமை என எல்லா விலங்குகளும் சாலையைக் கடக்க பழகிக் கொண்டுள்ளன.

நெடுஞ்சாலையின் சற்றே உயரமான சென்டர் மீடியனை யானைக் கூட்டம் கடப்பதும், மின் வேலியில் இருந்து லாவகமாக தப்பிப்பதை பார்ப்பதும் வன உயிரினத்தை நம் வசதிக்காக எப்படியெல்லாம் நாம் நிர்ப்பந்திருக்கிறோம் என்ற வேதனை எழாமல் இல்லை. வனவிலங்குகள் சாலைகளுக்கு பழகிவிட்டன என்பதற்காக நாம் அவற்றை நம் தெருவைக் கடக்கும் நாய், பூனை போல் பாவித்தால் நிச்சயமாக துயரமே மிஞ்சும். அப்படியான சம்பவம் தான் இந்த வீடியோவில் இருக்கிறது.

ஒரு காரில் செல்லும் நபர்கள் கார் ஜன்னல் வழியாக ஏதோ பழத்தை எடுத்து யானையை நோக்கி எறிகிறார்கள். அந்த யானை உடனே காரை அசைக்கிறது. உள்ளே இருக்கும் பழங்களை எடுக்க முயற்சிக்கிறது. அதற்குள் அந்த காருக்குள் இருக்கும் நபர்கள் உயிர் பயத்தில் அலறி வெளியேறுகின்றனர். ஒருவழியாக யானை அதற்கு தேவையானதை எடுத்துக் கொண்டு காரில் வந்தவர்களை தாக்காமல் சென்றுவிடுகிறது. இது ஏதோ நல்வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். எல்லா நேரங்களிலும் தனித்து வரும் யானை அவ்வளவு அமைதியாக சென்றுவிடுவதில்லை.

இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள சுஷாந்த நந்தா, "நீங்கள் வனவிலங்குகளுக்கு உணவளித்தால் அவை உங்களையே உணவாக்கலாம். இங்கே ஒரு யானை அப்படித்தான் ஆவேசம் காட்டியுள்ளது. காருக்குள் இருந்து தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு சென்றுள்ளது. வன விலங்குகளுக்கு உணவளிப்பதை நிறுத்துங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

குரங்குகள் அதிகம் இருக்கும் சுற்றுலா பகுதிகளில் பயணிகள் அவற்றிற்கு சிப்ஸ் தொடங்கி சியர்ஸ் சொல்லும் கொஞ்சம் பீர் வரை வைக்கும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். உண்மையில் வனவிலங்குகள் உப்பு, காரம் போன்ற சுவைகளுக்கு அப்பாற்பட்டவை எனக் கூறுகின்றனர் விலங்குகள் நல ஆர்வலர்கள். இனிப்பு கூட பழங்களில் இருந்து கிடைக்கும் இயற்கையான இனிப்பு தான் அவற்றிற்கு உகந்தவை. வனவிலங்குகளுக்கு பாசம் காட்டுவதாக நீங்கள் சாப்பிடும் பண்டங்களை, பானங்களை அவற்றிற்குக் கொடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE