Rewind 2022 | அச்சுறுத்திய இடி, மின்னல் பலி - இந்தியாவில் 5 மடங்கு அதிகரித்த இயற்கைப் பேரிடர்கள்!
காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெள்ளம், மழை போன்ற இயற்கைப் பேரிடர்கள் மட்டுமல்லாமல் குளிர் அலை, தூசிப் புயல், புயல், வெப்ப அலை, இடி, மின்னல், பனிப் பொழிவு, மூடுபனி முதலானவற்றின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டு அதிகரித்துள்ளது.
- மின்னல்: இந்தியாவில் 2022-ம் ஆண்டு அதிகம் தாக்கிய இயற்கைப் பேரிடர்களில் மின்னல் முதல் இடத்தில் உள்ளது. இதன்படி, 2022-ம் ஆண்டு மட்டும் 566 மின்னல் தாக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக 907 பேர் மரணம் அடைந்தனர். 2021-ம் ஆண்டில் மின்னல் தாக்கிய சம்பவங்கள் மூலம் 640 பேர் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
- வெப்ப அலை: இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பத்தின் அளவு புதிய உச்சத்தை அடைந்தது. மார்ச் மாதம் 122 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் பதிவானது. 2022-ம் ஆண்டு இதுவரை 27 வெப்ப அலைகள் பதிவாகி உள்ளன. இதனால் 30 பேர் மரணம் அடைந்தனர். கடந்த 2021-ம் ஆண்டு 4 வெப்ப அலைகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அதில் ஒருவர் கூட மரணம் அடையவில்லை.
- குளிர் அலை: இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் குளிர் அலை வீசி வருகிறது. குளிர் அலையின் தாக்கம் ஜனவரி மாதம் வரை இருக்கும். இந்தியாவில் நவம்பர் மாதம் இறுதி வரை ஒரு குளிர் அலை மட்டுமே பதிவாகி உள்ளது. இதில் ஒருவர் மரணம் அடைந்தார். கடந்த 2021-ம் ஆண்டு 5 குளிர் அலைகளில் 5 பேர் மரணம் அடைந்தனர்.
- இடி: 2022-ம் ஆண்டில் இந்தியாவில் 240 இடி தாக்குதல் சம்பங்கள் நிகழ்ந்துள்ளன. இதன்மூலம் 371 பேர் மரணம் அடைந்தனர். ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு 45 இடி தாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 26 பேர் மட்டுமே மரணம் அடைந்துள்ளனர். 2022-ம் ஆண்டு இடி தாக்கும் சம்பவங்களும், அதனால் ஏற்படும் மரணங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளன.
- பனிப் பொழிவு: 2022-ம் ஆண்டில் 7 பனிப் பொழிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 37 பேர் மரணம் அடைந்தனர். 2021-ம் ஆண்டு 393 பனிப் பொழிவு சம்பவங்களில் 12 பேர் மரணம் அடைந்தனர். 2021-ம் ஆண்டை விட 2022-ம் ஆண்டில் பனிப் பொழிவு சம்பவங்கள் குறைவாக இருந்தாலும், மரணங்களின் எண்ணக்கை அதிகரித்துள்ளது. இதைத் தவிர்த்து 2022-ம் ஆண்டு ஒரு மூடுபனி சம்பவத்தில் ஒருவர் மரணம் அடைந்தார்.
- தூசிப் புயல்: ஒரு தூசி புயல் மட்டுமே 2022-ம் ஆண்டில் வீசியுள்ளது. இதில் 22 பேர் மரணம் அடைந்தனர். கடந்த 2021-ம் ஆண்டு 5 தூசிப் புயல் வீசின. இதில் 26 பேர் மரணம் அடைந்தனர்.
- கனமழை: இந்தியாவில் 2022-ம் ஆண்டில் 7262 முறை கனமழையும், 1875 முறை மிக கனமழையும், 296 முறை அதீத கனமழையும் பெய்துள்ளது. மேலும், இதுவரை 3 புயல் மட்டுமே வட இந்திய கடல் பகுதிகளில் உருவாகி உள்ளன. இவற்றின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் 804 பேர் மரணம் அடைந்தனர்.
- மரணங்கள்: 2022-ம் ஆண்டில் மேலே குறிப்பிட்டுள்ள இயற்கைப் பேரிடர்கள் மூலம் 2,183 பேர் மரணம் அடைந்தனர். ஆனால், 2021-ம் ஆண்டில் 1,565 பேர் மட்டுமே மரணம் அடைந்தனர். இதன்படி, இயற்கைப் பேரிடர்களால் கடந்த ஆண்டை விட 2022-ம் ஆண்டில் 618 பேர் அதிகமாக மரணம் அடைந்தனர்.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் 2022-ல் இயற்கைப் பேரிடர்கள் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்