சர்வதேச அளவில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வலுவான உள்கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என ஐ.நா. சபையின் முன்னாள் சார்பு செயலாளர் எரிக் சோல்ஹெய்ம் பாராட்டு தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தின விழா சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நடந்தது. மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளர் கே.விஜயகார்த்திகேயன் வரவேற்றார். சர்வதேச மனித உரிமைகள் தினம் குறித்து ஆணையத் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான எஸ்.பாஸ்கரன் பேசினார்.
விழாவில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஜுடித் ரவின் பேசும்போது, “உலக நாடுகளின் ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் அமெரிக்கா தனி கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக மனித உரிமையை பாதுகாக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி பூண்டுள்ளார்'' என்றார்.
தமிழக காலநிலை மாற்றத்துக்கான ஒருங்கிணைப்பு அதிகாரியும், ஐ.நா. சபை முன்னாள் சார்பு செயலருமான நார்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சோல்ஹெய்ம் பேசியது: மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு சர்வதேச அளவில் பல்வேறு உதாரணங்களைக் கூற முடியும். மனித உரிமை மீறல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையில் தொடங்கி, உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் சம்பவங்கள் வரை உலகளவில் மனித உரிமை மீறல்கள் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இலங்கையில் போர்குற்றத்தில் ஈடுபட்டதாக இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளும், விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி இலங்கை அரசும் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளன. குற்றவியல் நீதிமன்றங்களால் மட்டுமே இதுபோன்ற மனித உரிமை மீறல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது. இருதரப்புக்கும் அமைதியை ஏற்படுத்த சர்வதேச நாடுகள் முயற்சிக்க வேண்டும். மனித உரிமைகள் மீறல் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அதில் எந்த தலையீடும் இருக்கக்கூடாது.
காலநிலை மாற்றத்துக்கான மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பாக நடத்தியுள்ளார். அதற்காக அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச அளவில் காலநிலை மாற்றத்தை எதி்ர்கொள்ள வலுவான உள்கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இவ்வாறு பேசினார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில், “மனித உரிமைகள் என்பது பிறப்புரிமை. அதை யாரும் மறுக்க முடியாது. சொத்துரிமையில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்பதை சட்ட ரீதியாக செயல்படுத்திக் காட்டியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர் வழிவந்த முதல்வர் ஸ்டாலின் மனித உரிமைகளின் பாதுகாவலராக திகழ்கிறார். சட்டத்தின் முழு பலனும் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் தமிழக அரசு கண்ணும், கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் நீதித்துறைதான் முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால் தற்போது பெருகிவிட்ட இணையவழிக் குற்றங்கள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களால் சட்டங்களை நவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப சட்டக் கல்வியிலும், சட்டக் கல்லூரிகளிலும் நவீனத்தை புகுத்தி வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன'' என்றார்.
நிறைவாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசியதாவது: அரசியலமைப்பு சட்டம் அனைத்து சுதந்திரங்களையும் அனைவருக்கும் தந்துள்ளது. இந்த உரிமைகள் ஒருவரால் மற்றவருக்கு தடுக்கப்படும்போதோ அல்லது மறுக்கப்படும்போதோ மனித உரிமை மீறல்கள் எழுகின்றன. குறிப்பாக மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகள் போலீஸார் மீதுதான் அதிகமாக சுமத்தப்படுகிறது.
போலீஸாரின் அலட்சியத்தால், கவனக்குறைவால் நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து நீதி விசாரணை நடத்தும் மனித உரிமை ஆணையம் அவ்வப்போது சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்டி வருகிறது. மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பது ஊர்ஜிதமானால், ஆணையத்தின் தீர்ப்புகளை உயர் நீதிமன்றமும் அங்கீகரித்து வருகிறது. மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் ஒருபோதும் எங்கும் நடக்கக்கூடாது.
மாநில மனித உரிமை ஆணையத்துக்கு தினமும் 15 பேர் மனுக்களுடன் வருகின்றனர் எனும்போது மனித உரிமையின் தாக்கம் மக்களை சென்றடைந்துள்ளது. ஆண்டுக்கு 15 ஆயிரம் வழக்குகளுக்கு இந்த மனித உரிமை ஆணையம் தீர்வளித்து உயர் நீதிமன்றத்தின் சுமையை இந்த ஆணையம் பங்கிட்டுக்கொண்டு தனது பணியை செவ்வனே செய்து வருவது பாராட்டுக்குரியது இவ்வாறு பேசினார்.
மாநில மனித உரிமைகள் ஆணைய பதிவாளர் என்.முரளிதரன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
14 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
19 days ago
சுற்றுச்சூழல்
20 days ago
சுற்றுச்சூழல்
23 days ago