மாடுகள் ஏப்பம் விட்டால் உரிமையாளர்களிடம் வரி வசூல்: நியூஸிலாந்தில் விவசாயிகள் போராட்டம்

By செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் அந்தந்த நாடுகளின் சார்பில் வரி வசூல் செய்வது நடைமுறையில் இருக்கும் வழக்கம். அந்த வகையில் மிகவும் புதுமையான வரியை மக்களிடம் வசூலிக்க நியூஸிலாந்து திட்டமிட்டுள்ளது. அதாவது மாடுகள் ஏப்பம் விட்டாலோ (Burp) அல்லது வாயு வெளியேற்றினாலோ (Fart) அதற்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்ற விளைவுகளை குறைக்கும் வகையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டு உள்ளதாம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய மக்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

உலகிலேயே இது மாதிரியான வரி விதிப்பு முதல் முறை என சொல்லப்பட்டது. நியூஸிலாந்து நாட்டில் விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதாவது அங்கு 1 கோடி அளவில் மாடுகள் மற்றும் இரண்டரை கோடி அளவில் ஆடுகளும் உள்ளதாம். அந்த நாட்டில் 5 மில்லியன் மக்கள் தான் வசித்து வருவதாக தகவல். பைங்குடில் வாயுக்களில் பாதி அளவு அந்த நாட்டில் உள்ள பண்ணைகளில் இருந்துதான் வெளியாகிறதாம். குறிப்பாக மீத்தேன் வாயு வெளியேற்றத்தில் இந்த கால்நடைகளின் பங்கு அதிகம் என சொல்லப்பட்டுள்ளது.

இதில் நியூஸிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் உறுதியாக இருக்கிறாராம். 2030 வாக்கில் கால்நடை வெளியிடும் மீத்தேன் அளவை 10 சதவீதமாகவும், 2050 வாக்கில் அதை 47 சதவீதமாகவும் நியூஸிலாந்து குறைக்க உள்ளதாம். இதற்கு தான் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேளாண் பணியில் இருந்து மாற்று பணிக்கு மாறுவதன் மூலம் தற்போதைய சூழலை காட்டிலும் அதிக அளவு பைங்குடில் வாயுக்கள் வெளியாகும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் பெருமளவில் விவசாயிகள் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகள்தான் போராட்டத்திற்கு வந்திருந்ததாக தகவல். இந்த பருவ காலத்தில் விவசாயிகள் தங்கள் பணியில் மும்முரமாக இருப்பார்களாம். அதனால்தான் போராட்டத்திற்கு நிறைய பேர் வரவில்லை என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. சிலர் அரசின் இந்த முடிவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். மாற்று வழிகளுக்கு விவசாயிகள் பழகிக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதை வரவேற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE