தமிழகம் 2030-க்குள் 38 மில்லியன் டன் கார்பன் உமிழ்வை குறைக்க முடியும். எப்படி?

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: 2030-ம் ஆண்டுக்குள் பதிவாகும் மொத்த வாகனங்களில் 10 சதவீத வாகனங்கள் மின்சார வாகனமாக இருந்தால், 38 மில்லியன் டன் கார்பன் உமிழ்வை தமிழகம் குறைக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கார்பன் சமநிலை அடைவதற்கான இலக்குகளை நிர்ணயம் செய்து அனைத்து நாடுகளும் செயலாற்றி வருகின்றன. குறிப்பாக, வாகனங்களில் இருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வை குறைக்க பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த வழியில் தமிழகத்திலும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி இந்தியாவில் அதிக மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் பதிவாகும் மொத்த வாகனங்களில் 10 சதவீத வாகனங்கள் மின்சார வாகனமாக இருந்தால், 38 மில்லியன் டன் கார்பன் உமிழ்வை தமிழகம் குறைக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.

க்ளைமேட் ட்ரெண்ட் (Climate Trends) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் எவ்வளவு கார்பன் உமிழ்வை குறைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 2030-ம் ஆண்டுக்கு பதிவாகும் வாகனங்களில் 5 சதவீத வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றினால் 36.53 மில்லியன் டன் கார்பன் உமிழ்வை குறைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 2022-ம் ஆண்டு முதல் 2030ம் வரை பதிவாகும் வாகனங்களில் 10 சதவீத வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருந்தால் 38.76 மில்லியன் டன் கார்பன் உமிழ்வை குறைக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE