பூமியை காக்கும் நோக்கில் தனது நிறுவனத்தை என்ஜிஓ-க்கு எழுதி வைத்த மாமனிதர்!

By செய்திப்பிரிவு

மனிதர்களின் நெஞ்சுக்குள் மாண்டு போகாமல் இருக்கின்ற மனிதத்தின் காரணத்தால்தான் தன்னால் முடிந்த உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்து வருகிறோம். இங்கு அந்த உதவியானது சிறியதா அல்லது பெரியதா என்ற வேறுபாடு எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. என்ன... அந்த உதவி பெரும்பாலும் ஏதேனும் ஒரு பொருளாகவோ, பணமாகவோ இருக்கும். ஆனால், இந்த அனைத்து உதவிகளில் இருந்தும் வேறுபட்டு நிற்கிறார் அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒரு மாமனிதர்.

அவர் தனது நிறுவனத்தையே பூமியின் நலனுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார். அவரது பெயர் ஈவா சொய்னாட். 83 வயதான அவர் அமெரிக்காவை சேர்ந்தவர். சாகச பிரியரான அவர் சுற்றுச்சூழல் ஆர்வலரும் கூட. சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரர்.

‘பட்டகோனியா’ (Patagonia) எனும் ஆடை நிறுவனத்தை நிறுவியவர். இப்போது அதன் உரிமத்தை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு எழுதி வைத்துள்ளார். இந்த நிறுவனத்தில் இனி கிடைக்கும் லாபம் அனைத்தும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு எதிராக செலவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு ஏற்ற வகையில் தனது குடும்பத்தின் வசம் உள்ள அந்த நிறுவனத்தின் உரிமத்தை தொண்டு நிறுவனத்தின் பெயருக்கு மாற்றி வைத்துள்ளார். பூமிதான் தங்களது ஒரே பங்குதாரர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் லாபமாக கிடைக்கும் பங்கு அந்த தொண்டு நிறுவனத்தின் வசம் செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வளங்களின் வளத்தை பாதுகாக்க இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE