முதுமலை அருகே ஆற்றில் அடித்துவரப்பட்ட குட்டி யானையை, வனத்துறையினர் தாய் யானையுடன் சேர்த்து வைத்தனர்.
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள மாவனல்லா பகுதியில் கடந்த 29-ம்தேதி பெய்த கன மழை காரணமாக மாவனல்லா ஆற்றில் குட்டி யானை ஒன்று மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்களுடன் இணைந்து ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானையை பத்திரமாக மீட்டனர். தாயின்றி தவித்து வந்த குட்டி யானையை, தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை யினர் உடனடியாக ஈடுபட்டனர். குட்டி மீட்கப்பட்ட இடத்தில் தாய்யானை உள்ளதா என கண்காணித்தனர்.
பின்னர் வனத்துறையினர் எட்டு குழுக்களாக பிரிந்து மாவனல்லா, வாழைத்தோட்டம், ஆனைகட்டி, சிங்காரா உட்பட்ட வனப்பகுதிகளில் தாய் யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். சீகூர் வனப்பகுதியில் தனியாக நின்ற பெண் யானையை, குட்டியின் தாய் எனக் கருதி அதன் அருகே குட்டி யானையை விட்டு விட்டு வந்தனர்.
குட்டி யானை, பெண் யானை அருகில் சென்ற நிலையில் அது தாய் யானை தான் என கருதி வனத்துறையினரும் திரும்பினர். இந்நிலையில், குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கச் சென்றபோது, அது மீண்டும் தனியாக மரத்தடியில் நின்று கொண்டிருப்பதை கண்டனர்.
மீண்டும் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் அதற்கு தேவையான சிகிச்சை அளித்தனர். குட்டி யானைக்கு குளுக்கோஸ், இளநீர் உட்பட்ட திரவ உணவுகள் வழங்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மூன்றாவது நாளாக சீகூர் வனப்பகுதியில் தாய் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது சீகூர் வனத்துக்கு உட்பட்ட பூதிபட்டி கேம்ப் அருகில் ஒரு யானைக் கூட்டமும், காங்கிரஸ் மட்டத்தில் ஒரு யானை கூட்டமும் இருப்பதாக தகவல் வந்தது. உடனடியாக குட்டி யானையை வண்டியில் ஏற்றி அப்பகுதிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் பூதிபட்டி அருகே இருந்த கூட்டம் நகர்ந்து வேறு இடத்துக்கு சென்று விட்டதாக தகவல் கிடைத்தது.
இதனால், குட்டி யானையை காங்கிரஸ் மட்டத்துக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் பாதைக்கு அருகில் சுமார் 15 மீட்டரில் ஒரு பெண் யானை இருந்தது. உடனடியாக வண்டியை நிறுத்தி மருத்துவர்கள் கலைவாணன் மற்றும் ராஜேஷ்குமார் அந்த யானையைப் பார்த்தனர்.
அந்த பெண் யானை, பால் கொடுக்கும் பருவத்தில் இருப்பதை அறிந்தனர். பின்னர் குட்டி யானையின் மீது சேறு மற்றும் சிறிதளவு சாணத்தையும் பூசி, வண்டியை விட்டு கீழே இறக்கி விட்டனர். அப்போது அந்த பெண் யானை காட்டுக்குள் மெதுவாக நகர்ந்து சென்றது. இவர்கள் குட்டி யானையை பெண் யானை பின்னால் கொண்டு சென்று விட்டனர்.
பெண் யானை ஒரு மேடான பகுதிக்கு சென்று குட்டி யானையை பார்த்துக் கொண்டிருந்தது. பின்னர் அதை நோக்கி குட்டி யானையை வனத்துறையினர் விரட்டினர். உடனடியாக குட்டியானை பிளிறவே, அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒரு இளம் ஆண் யானை பிளறியபடி வேகமாக குட்டி அருகே வந்தது. அந்த யானை குட்டியை சுற்றிச் சுற்றி வந்தது.
பின்னர் குட்டியை ஒரு இடத்தில் நிறுத்தி வைத்து விட்டு, வனத்துறையினரை சுமார் 200 மீட்டர் தூரம் விரட்டியது. பின்னர் அது மீண்டும் திரும்பிச் சென்று குட்டி யானையை மெதுவாக அழைத்துச் சென்றது. பின் குட்டி யானையிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை. தாய் யானை குட்டி யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று மறைந்தது.
நேற்று காலை குட்டியை விட்ட இடத்துக்குச் சென்று ட்ரோன் மூலம் வனத்துறையினர் கண்காணித்தனர். அந்த குட்டி பிற யானைகளுடன் செல்வதை உறுதி செய்தனர். தாயிடம் குட்டியை சேர்க்கும் வனத்துறையினர் முயற்சிக்கு பலன் கிடைத்தது. தாயிடமிருந்து பிரிந்த குட்டி அதன் தாயுடன் மூன்று நாட்களுக்கு பிறகு இணைந்தது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
20 hours ago
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
4 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
17 days ago
சுற்றுச்சூழல்
20 days ago
சுற்றுச்சூழல்
21 days ago
சுற்றுச்சூழல்
1 month ago
சுற்றுச்சூழல்
1 month ago
சுற்றுச்சூழல்
1 month ago