“கடலில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள்” - புதுச்சேரி நிகழ்வில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் வேதனை

By அ.முன்னடியான்

புதுச்சேரி: ‘‘தூய்மையான கடற்கரை; பாதுகாப்பான கடற்கரை’’ பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகம், புதுச்சேரி அரசு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இன்று நடத்தின. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே கடற்கரை தூய்மை படுத்தும் நிகழ்ச்சி, மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கடற்கரை தூய்மை உறுதிமொழியை வாசித்தார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, அரசுச் செயலர் ஸ்மிதா, மாவட்ட ஆட்சியர் வல்லவன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் "தூய்மையான கடற்கரை, பாதுகாப்பான கடற்கரை' என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியை மத்திய அமைச்சர், ஆளுநர் ஆகியோர் பார்வையிட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

தொடர்ந்து, கடற்கரை விழிப்புணர்வு குறித்த நடைப்பயணம் மற்றும் மிதிவண்டி பேரணியை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் மாணவர்களுடன் இணைந்து, கடற்கரையை தூய்மை செய்யும் பணியில் பங்கேற்று, அவர்களுடன் கலந்துரையாடினர். இந்நிகழ்வில் என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள், இந்திய சாரணர் சங்கம் தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசியது: ‘‘சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ள புதுச்சேரிக்கும், இந்திய சுதந்திர வரலாற்றுக்கும் ஏராளமான தொடர்புகள் உள்ளன. மகான் அரவிந்தரின் வருகையால், புதுச்சேரியின் வரலாறு மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்திய நாடு 7,500 கி.மீ கடற்கரையைக் கொண்டுள்ளது. கடல், ஆறுகள் இணைந்த சிறந்த கலாசாரத்தையும் நம்நாடு பெற்றிருக்கிறது. கடல், கடலோர பகுதிகளைப் பாதுகாக்கவும், சுத்தமாக வைத்திருக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

சமீப காலங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் அதிகளவில் காணப்படுவது வேதனை. கடல் மற்றும் கடலோர பகுதிகளில் தூய்மையை பராமரிக்க வேண்டும். நம்முடைய கடல் வளத்தை நாமே அழிப்பது கவலையளிப்பதாக உள்ளது. வருங்கால சந்ததியினரை மனதில் கொண்டு, கடலை தூய்மையாக பாதுகாப்பது நமது கடமை. நாட்டின் கடல் பகுதிகளை தூய்மையாக்க 75 நாட்களாக விழிப்புணர்வு மற்றும் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆயிரம் டன் குப்பைகள் அதில் அகற்றப்பட்டுள்ளன. வரும் செப்.17-ம் தேதி கடற்கரை தூய்மை தினம் கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் நமது பிரதமரின் பிறந்த நாளும் வருகிறது. கடற்கரையை தூய்மைப்படுத்த பிரதமர் மோடியும் வலியுறுத்தியுள்ளார். இதனை கருத்தில்கொண்டு, நாட்டு மக்கள் அனைவரும் 7,500 கி.மீ தொலைவுள்ள கடல்பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.’’என்றார்.

முன்னதாக புதுச்சேரிக்கு வந்த மத்திய அமைச்சர் உலகளவில் நீலக்கொடி சான்று பெற்ற, புதுச்சேரி ஈடன் கடற்கரை பகுதிக்குச் சென்று, அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு கடற்கரை பராமரிப்பு பணியில் இருந்த ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE