லாபம் தரும் வெண்பன்றி வளர்ப்பு

By கா.சு.வேலாயுதன்

பன்றி என்றால் சாக்கடைகளில் சுற்றித்திரியும் உயிரினம் என்பது நம்மில் பெரும்பாலனவர்களின் நம்பிக்கை. ஆனால் அப்படி அல்ல, பன்றி பெருஞ்செல்வம் தரக்கூடியது.

குறிப்பாக சிறு, குறு விவசாயிகளின் செழிப்புக்குப் பக்கபலமாக நிற்கக்கூடியது. கடந்த வாரம் கோவையில் நடந்த வெண்பன்றி வளர்ப்பு குறித்த கண்காட்சி இதை உணர்த்தியிருக்கிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பாக கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.எம்.எஸ். திருமண மண்டபத்தில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களாக நடைபெற்ற இந்தக் கண்காட்சிக்குள் நுழைந்தபோது பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.

பன்றி கழிவை உண்ணும் என்பதை மாற்றும் அளவுக்கான பல உணவுப் பொருட்கள் அங்கே வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. மக்காச் சோளம், வெள்ளைச் சோளம், கோதுமை, சோயா புண்ணாக்கு, சூரியகாந்தி புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, ஆமணக்கு விதைகள் - இப்படி ஐம்பதுக்கும் மேற்பட்ட பன்றி உணவு வகைகள் அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

‘‘இவை மட்டுமல்ல, சத்து அதிகம் உள்ள அதேநேரம் சற்று விலை குறைவான தீவனங்களான மரவள்ளிக்கிழங்கு மாவு, மாம்பழத் தோல், ஜவ்வரிசி மாவு, பிஸ்கெட், சாக்லெட் தொழிற்சாலைகளில் கிடைக்கும் கழிவு, கொதிக்கவைத்த எஞ்சிய சாப்பாடு (உணவகங்கள், மாணவர் தங்கும் விடுதி, திருமணச் சத்திரம், காய்கறிச் சந்தை போன்ற இடங்களில் மீதமான உணவையும் வீணான காய்கறிகளையும் வாங்கிவந்து இப்படிப் பயன்படுத்தலாம்) போன்ற உணவைப் பன்றிகளுக்கு அளிக்கலாம்.

உணவுக் கழிவைக் கொடுப்பதற்கு முன் அதைத் தண்ணீரில் கலந்து நன்கு கொதிக்க வைத்த பின்பே கொடுக்க வேண்டும். வளரும் பன்றிகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இத்தகைய உணவுப் பொருட்களை ஐந்து கிலோவுக்கு மேல் சாப்பிடக் கொடுக்கலாம்’’ எனப் பன்றியின் உணவுப் பழக்கம் குறித்து கால்நடை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் கணபதி குறிப்பிட்டார்.

பன்றிகளின் எதிரியான ஈக்கு ஒரு பொறி

கீழ்ப்பகுதியில் அதிகத் துளையிடப்பட்ட கூம்பு வடிவ பிளாஸ்டிக் குடுவைகள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. அவை ஈ பிடிக்கும் கருவிகள். பன்றிகளுக்குச் சவாலான முக்கிய உயிரினமே ஈக்கள்தாம். பன்றிப் பண்ணைகளில் பச்சை, சாம்பல், கறுப்பு ஆகிய மூன்று வண்ண ஈக்கள் காணப்படும். இதில் கறுப்பு வண்ண ஈக்கள்தாம் பன்றிகளின் முதல் எதிரி.

பன்றிகளின் உடலில் வெளியேறும் திரவக் கழிவையும் உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவையும் விட்டையையும் உண்பதற்காகப் பன்றிகளின் கண், வாய், காது, காயங்கள் ஆகியவற்றில் ஈக்கள் மொய்த்தபடி இருக்கும். இந்த ஈக்கள் பன்றிகளை உண்ணவிடாமலும் உறங்கவிடாமலும் தொந்தரவு செய்யும். இதனால் பன்றிகள் உடல்நலம் குன்றி, சோர்ந்து போகும்.

பன்றிகளின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் வெவ்வேறு நோய்த் தாக்குதலுக்கும் உள்ளாகக்கூடிய அபாயமும் இருக்கிறது. அதிலும், பன்றிகளின் உடலில் காயங்கள் ஏற்பட்டால் ஆபத்து உருவாகக்கூடும். அந்தக் காயத்தில் ஈக்கள் லட்சக்கணக்கான முட்டைகளை இட்டுவிடும்.

 கோடைமழைக் காலத்தில் (மார்ச் - அக்டோபர்) ஈக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். ஒரு பெண் ஈ 1,000 முட்டைகளை இடும். அவை 24 மணி நேரத்தில் பொரிந்து இளம்புழுக்களாக வெளிவரும். நான்கைந்து நாட்களில் இது கூட்டுப்புழுவாக மாறி மேலும் நான்கைந்து நாட்களில் முழு ஈக்களாக உருவம் பெற்றுவிடும்.

‘‘இந்த ஈக்களை ஈ பிடிக்கும் கருவியின் மூலம் எளிதாக சிறைப்படுத்திவிட முடியும். இந்தக் கருவிக்குள் வைக்கப்பட்டிருக்கும் மருந்து ஈக்களை ஈர்க்கும் வாசணை கொண்டது. அதில் தூண்டப்பட்டு சிறு துளைகள் உள்ளே வரும் ஈக்களால் வெளியேற முடியாது.

இந்தக் கருவிக்குள் அகப்பட்டு இறந்த ஈக்கள் உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் குடுவைக்குள் விழுந்துவிடும். குடுவை நிறைந்தவுடன் அதிலுள்ள இறந்த ஈக்களை எளிதாக அகற்றி விடலாம்’’ என்று இந்தக் கருவி குறித்து விளக்கம் அளித்தனர் அதைக் காட்சிப்படுத்தியிருந்த நிறுவனத்தினர்.

வெண் பன்றிகள் தரம் காணும் முறை, அதன் வளர்ப்பு முறை, சிகிச்சை அளிக்கும் முறை, குட்டிகள் ஈனும்போது அதைப் பேணும் முறை போன்றவையும், நல்ல வளர்ந்த பன்றியை எப்போது பிடிக்க வேண்டும், எப்படிப் பிடிக்க வேண்டும், அதை இறைச்சியாக மாற்றுவது எப்படி ஆகியவை குறித்தும் விளக்கும் விதமாக கண்காட்சியில் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் அதற்குப் பயன்படும் கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பன்றி பிடிக்கப் பயன்படும் சுருக்குக்கயிறு, கொக்கிகள், கறி வெட்டுவதற்கான வெட்டுக்கத்திகள், தோல் நீக்கும் கருவி, மின் ரம்பம் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பன்றிக் காய்ச்சல் பன்றியால் வருவதல்ல

பன்றி இனங்கள், கொட்டகை அமைப்பு, தீவன மேலாண்மை, தீவனச் செலவைக் குறைக்கும் வழிமுறைகள், பன்றிகளைத் தாக்கும் நோய்கள், நோய் தடுப்பு முறைகள், விற்பனை உத்திகள், பன்றி இறைச்சிப் பொருட்கள் தயாரிப்பு, பன்றி இறைச்சி ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், அதனால் வளரும் பண்ணைப் பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அனுபவம் பெற்ற பண்ணையாளர்கள் மூலம் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இறுதியாக இந்தத் தொழிலில் உள்ள சிரமங்கள், சவால்கள் ஆகியவை பற்றி மேடையில் விவாதம் நடந்தது. பன்றிக் காய்ச்சல்தான் முக்கிய விவாதப் பொருளாக இருந்தது.

பன்றிக்காய்ச்சல் என்பது எச் 1 என் 1 என்ற வைரஸால் வருவது. அந்த வைரஸ் பெயரைச் சொல்லியே நோயைக் குறிப்பிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரிடம் கோரிக்கை வைத்து விட்டோம். அவர்களும் அதை அறிவுறுத்தியும் இருக்கிறார்கள். ஆனாலும் பன்றிக்காய்ச்சல் என்றே அந்த வைரஸ் பாதிப்பு அழைக்கப்படுகிறது.

கிலோ ரூ. 300 வரை விற்கும் பன்றி இறைச்சி இப்படிச் செய்தி பரவும்போதெல்லாம் ரூ. 50க்கு கொடுத்தாலும் வாங்க ஆள் வருவதில்லை. எனவே எச்1 என் 1 வைரஸ் காய்ச்சலை அந்தப் பெயரைச் சொல்லியே அழைக்க வேண்டும். பன்றிக்காய்ச்சல் எனச் சொல்லக்கூடாது.

இதைக் கால்நடைத் துறை அமைச்சர் சுகாதாரத் துறை அமைச்சர், உள்ளாட்சித் துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோரிடத்தில் பேசி அரசு நாளிதழில் வெளியிட வேண்டும் என்று பண்ணையாளர்கள் மேடையிலேயே கோரிக்கைவைத்தனர். அதைப் பரிசீலிப்பதாக கண்காட்சியில் கலந்துகொண்ட அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணனும் எஸ்.பி வேலுமணியும் தெரிவித்தனர்.

நஷ்டம் தராத தொழில்வெண்பன்றி-வளர்ப்பு

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருவது குறித்துப் பேசிய நாகராஜ் ‘‘அரசு நடத்தும் முதல் வெண்பன்றிக் கண்காட்சி இது. இதை நாமக்கல்லில் நடத்தவே திட்டமிட்டிருந்தார்கள். கோவையில்தான் பன்றி வளர்ப்பு சிறப்பாக நடக்கிறது. அதனால் இங்குதான் இந்தக் கண்காட்சியை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் அமைச்சர்களிடமும் பண்ணையாளர்கள் சார்பாகக் கோரிக்கைவைத்தோம்.

எங்கள் முயற்சியில் இந்தக் கண்காட்சி கோயம்புத்தூரில் நடந்தது. தமிழ்நாடு முழுக்கப் பன்றிப் பண்ணையாளர்கள் 1,100 பேர் இருக்கிறார்கள். அவர்களில் பாதிப் பேர் கோயமுத்தூரில்தான் தொழில் செய்கிறார்கள். 5 கிலோ எடையுள்ள ஒரு குட்டியை ரூ. 5 ஆயிரம் கொடுத்து வாங்கி வளர்த்தால், அது சினையாகி 114 நாள் கழித்து 8 முதல் 12 குட்டிகள்வரை போடும்.

இந்தக் குட்டிகள் ஏழு எட்டு மாதத்தில் 70- 80 கிலோ உள்ள பெரிய பன்றிகளாக வளர்ந்துவிடும். இந்தப் பருவத்தில் இதை இறைச்சிக்கு விற்கலாம். வெண் பன்றிக்கு ஏற்றுமதி வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது. எங்களுக்கு ஒரே பிரச்சினை இந்தப் பன்றிக்காய்ச்சல் வதந்திதான். அதைச் சரிசெய்தாலே போதும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

8 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

15 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

சுற்றுச்சூழல்

18 days ago

மேலும்