கடலம்மா பேசுறங் கண்ணு 14: சாகசக் கடல்வீரன்!

By வறீதையா கான்ஸ்தந்தின்

ண் சார்ந்த சமூகங்களில் ஊக்கம் மிகுந்த தொழிலாளிகளுக்கு எப்போதுமே மதிப்புதான். ‘பெண்டாட்டி பிள்ளைகளுக்குக் கஞ்சி ஊற்ற’த் தகுதியான இளைஞனுக்குப் பெண் கொடுக்க எல்லோரும் முன்வருவார்கள். சல்லிக்கட்டில் ஏறுதழுவும் வீரம் ஆணின் அடையாளம். மருதத் திணையில் இது யதார்த்தம்.

நெய்தல் திணையில் ஆண்மையின் அடையாளம் என்ன? வேட்டைக் களத்தில் தன்னைத் தற்காத்துக்கொண்டு சிறந்த வேட்டைப் பெறுமதியுடன் கரை திரும்பி, தன்னை எதிர்நோக்கியிருக்கும் குடும்பத்தின் பசியாற்றும் வீரமும் தாய்மை அக்கறையும்தான் நெய்தல் நில ஆண் மகனின் அடையாளம். ஆனி- ஆடியில் கடலுக்குள் போகிறவன் கடல்வீரன். படுவோட்டு மரத்தொழில் என்கிற தொலை கடலோடிக் கடல்தங்கல் செய்து, தூண்டிலிட்டு மீன்பிடித்துக் கரை திரும்புபவன் சாகசக் கடல்வீரன்.

கரைக்கு வராத கதை

படுவோட்டு மரத் தொழிலில் அப்படி என்ன சிறப்பு? வீரமும் துணிவும் விவேகமும் இந்தத் தொழிலில் முதன்மையானவை. கடலைக் கணிக்கும் அபாரத் திறன் வேண்டும். நங்கூரமிட முடியாத ஆழக்கடலில் கட்டுமரத்தில் நீரோட்டங்களைச் சமாளித்து, பகலின் கடும் வெய்யிலையும் இரவின் குளிரையும் தாங்கி நின்று, உடன் எடுத்துச் செல்லும் அளவான உணவு, தண்ணீருடன் மூன்று நான்கு நாட்களைக் கடலில் செலவிடுவது சாதாரணமானதல்ல. கப்பல் பாதையில் இரவில் ஏற்படும் விபத்துகளில் ஜலசமாதியடைந்தோர் ஏராளம். கடலில் நிகழ்வதில் பெரும்பான்மையும் கரைக்கு வராத கதைகளே!

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தென்பகுதியில் வாழும் தீவாரா என்னும் ஐந்து மீனவ இனக்குழுக்களில் ஒன்றான முக்குவர், திருவனந்தபுரம் பகுதிகளில் வள்ளம் என்னும் படகுகளில் படுவோட்டுத் தொழிலுக்குப் போகிறார்கள். கன்னியாகுமரிக் கடற்கரைகளில் கட்டுமரத்திலும் பாய் விரித்துப் ‘படுவோட்டு’ செய்தனர். கசம் (இருள் பாதாளம்) என்னும் பேராழக் கடல்களில் ‘கலவாக்கெட்டு’, ‘செம்மீன்கெட்டு’ என்னும் குறிப்பிட்ட மீனினங்களைக் குறிவைத்துப் போகிறவர்களும் உண்டு.

சிறப்பு ஏற்பாடுகள்

ஒரு படுவோட்டு வள்ளத்தை / மரத்தை நெடும் பயணத்துக்குத் தயார் செய்வதே ஒரு கலைதான். உப்புச் சாக்கு, பனையோலைக் கடகங்கள், பல்வகைத் தூண்டில் கயிறுகள், கோட்டுமல், அடிகம்பு, கொளுத்தோட்டி, இரைமீன், உணவு, தண்ணீர், வெற்றிலைப் பெட்டி (மடைப்பெட்டி) – இவையெல்லாம் சிறப்பு ஏற்பாடுகளில் அடங்கும்.

கடலுக்குள் உப்பு மூட்டை எதற்கு?

கரை திரும்ப நான்கு நாட்களாகும். முதலில் பிடித்த மீன்கள் கெட்டுப் போய்விடும் என்பதால் இறுதி நாளில் பிடிக்கும் மீன்கள் ஒழிய மற்ற அறுவடையை உடனுக்குடன் பனையோலைக் கடகத்தில் உப்பிட்டு வைத்துவிடுவார்கள்.

சாகச வீரர்கள்

அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியக் கடற்கரைகளுக்கு இயந்திர மீன்பிடி முறையும் விசைப்படகுகளும் அறிமுகமாகி இருக்கவில்லை. கட்டுமரத்தில் பாய் விரித்து, ஆழக்கடல் புகுந்து, பல நாள் ‘கடல் தங்கல் மீன்பிடி’ (Multiday fishing) நிகழ்த்திக் கரைதிரும்பும் அந்தக் காலக் கடலோடிகளின் துணிச்சல் அபாரமானது. புதிது புதிதாய் மீன் அறுவடைக் களங்களைக் கண்டடைந்து, அதைக் கடல் துறையின் சக மீனவர்களுக்கு அணுகுபொருள் ஆக்கும் ஈரமும் வீரமும் கொண்டவர்கள் பழங்குடி மக்கள்.

தாய்மை அக்கறை (Altruism) இன்று மண்ணின் மக்களிடம்தான் மீந்து நிற்கிறது. தென் திருவிதாங்கூர் கடற்கரையில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை ‘தங்கல் பயண மீன்பிடி’ என்பது பெயர் பெற்ற கடல் சாகசமாக இருந்து வந்தது. கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மேற்குக் கடற்கரை அப்போது திருவிதாங்கூரின் தென்னெல்லை. இங்கு ஊர்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் படுவோட்டுக் கடல் சாகச வீரர்கள் இருந்தனர்.

(அடுத்த வாரம்: பசி, சாகசம், மரணம்!)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல்
வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

10 hours ago

சுற்றுச்சூழல்

19 hours ago

சுற்றுச்சூழல்

20 hours ago

சுற்றுச்சூழல்

21 hours ago

சுற்றுச்சூழல்

23 hours ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

3 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

4 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

மேலும்