1993, செப்டம்பர் 30!
மகாராஷ்டிர மாநிலம், லாட்டூர்.
இந்தியா அதுவரையில் கண்டிராத மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 52 கிராமங்கள் அழிந்தன. 10 ஆயிரத்துக்கும் மேலானோர் இறந்தனர். 30 ஆயிரத்துக்கும் மேலானோர் காயமடைந்தனர்.
அப்போது அங்கிருந்த பெண்களை ஒன்றுதிரட்டி, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார் பிரேமா கோபாலன். அந்தப் பெண்களே தங்கள் வீடுகளைச் சீரமைத்துக்கொண்டனர். பெருமளவு கல்வி அறிவு இல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அந்தப் பெண்களிடையே சுயஉதவிக் குழுக்களை உருவாக்கினார் பிரேமா.
அதற்குப் பிறகு நிலநடுக்கம், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது, இடிந்த வீடுகளை மறுகட்டுமானம் செய்வது, மரபுசாரா பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது என அந்தக் குழுக்கள் பரவலாகச் செயல்படத் தொடங்கின.
1998-ம் ஆண்டில் அந்தக் குழுக்களை ஒன்றிணைத்து, ‘ஸ்வயம் சிக்ஷான் பிரயோக்’ (எஸ்.எஸ்.பி.) என்ற அமைப்பைத் தொடங்கினார் பிரேமா. ‘சுயகல்வியின் மூலம் முன்னேற்றம்’ என்பதே அதன் பொருள்.
எல்லாம் பெண்கள்
புனேவில் பிறந்து, சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்ற பிரேமா, 1984-ம் ஆண்டே ‘ஸ்பார்க்’ எனும் அமைப்பைத் தொடங்கி பெண்கள் நலன் சார்ந்து செயல்பட்டு வந்தார். என்றாலும், 1998-ம் ஆண்டில் எஸ்.எஸ்.பி. அமைப்பு சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட பிறகுதான், பிரேமாவைப் பற்றியும், அவரின் அமைப்புப் பற்றியும் பலருக்கும் தெரிய வந்தது.
தற்சமயம் 5,500 மகளிர் சுயஉதவிக் குழுக்களைக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு, மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் இயற்கை வேளாண்மை பணிகளை ஊக்குவித்தது. வேளாண் பணிகள் அனைத்திலும் அந்தப் பெண்களே ஈடுபட்டனர். “இந்த முயற்சியால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்துள்ளார்கள்” என்கிறார் பிரேமா கோபாலன்.
அந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துரையாடி, ஆளுக்கு 0.4 ஹெக்டேர் வீதம் நிலப்பகுதியை வாங்கினார்கள். அந்த நிலங்களில் இயற்கை விவசாயம், கலப்புப் பயிர் சாகுபடி உட்பட வளங்குன்றா விவசாய முறைகளைப் பின்பற்றினர். அதில் வந்த லாபம் அனைத்தும் அந்தப் பெண்களுக்கே சென்று சேரும்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இது சாதாரண விஷயமாகத் தோன்றலாம். ஆனால், மராத்வாடா பகுதியைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொண்டால், அந்தப் பெண்கள் செய்திருக்கும் சாதனை எவ்வளவு மகத்தானது என்று புரியும்.
தற்கொலை தலைநகரம்
கடந்த சில வருடங்களாகவே, விவசாயிகள் தற்கொலை அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிர மாநிலம் இருந்துவருகிறது. அதிலும் மகாராஷ்டிராவிலேயே மராத்வாடா பகுதியில்தான் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
அளவுக்கு அதிகமான ரசாயன உரப் பயன்பாடு, வீரியமற்ற விதைகள், பொய்த்துப் போன பருவமழை ஆகியவற்றின் காரணமாக அந்த விவசாயிகள் வங்கிகளிடமும் வட்டிக் கடைக்காரர்களிடமும் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது. வட்டி குட்டி போட்டு, வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில், அவர்கள் பூச்சிக்கொல்லியைக் குடித்தும், மரத்தில் தூக்கிட்டும் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர்.
இதனால், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றன. பல குழந்தைகள் கல்வியை இழந்திருக்கிறார்கள். ஒரு வேளை உணவுக்கும் பிறரிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
உலக அங்கீகாரம்
இந்தப் பின்னணியில்தான், ஸ்வயம் சிக்ஷான் பிரயோக் அமைப்பு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சாதனைக்காக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஒரு அங்கமான ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம் (யு.என்.டி.பி) வழங்கும் ‘2017-ம் ஆண்டுக்கான ஈகுவேடார் பிரைஸ்’ விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக 120 நாடுகளிலிருந்து 806 அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 15 அமைப்புகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 15 அமைப்புகளில் ஒன்றுதான் எஸ்.எஸ்.பி..
இதே அமைப்பு, மகாராஷ்டிர கிராமங்களில் சூரிய ஒளியாற்றல் மூலம் மின்சார வசதி மற்றும் பசுமை அடுப்பு வசதிகளை உருவாக்கித் தந்ததற்காக, பருவநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடும் அமைப்புகளுக்கு வழங்கப்படும் ஐ.நா. மன்றத்தின் ‘கிளைமேட் விருதை’ கடந்த ஆண்டு வென்றது.
2009-ம் ஆண்டிலிருந்து மராத்வாடா பகுதியில் இந்த அமைப்பு செயலாற்றி வருகிறது. அப்போதிலிருந்து இப்போதுவரை சுமார் 72 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த அமைப்பு, இதர மகளிர் அமைப்புகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்துவருகிறது. அதிலும் குறிப்பாக இயற்கையைப் பாதுகாக்கும் வேளாண் பணிகளில் பெண்களை எப்படிச் சிறப்பாக ஈடுபடுத்தலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக மாறியிருக்கிறது!
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 day ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
2 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
7 days ago
சுற்றுச்சூழல்
13 days ago
சுற்றுச்சூழல்
14 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
15 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
19 days ago
சுற்றுச்சூழல்
20 days ago
சுற்றுச்சூழல்
23 days ago