மக்கள்தொகைப் பெருக்கத்தின் காரணமாக உற்பத்தியை அதிகரிக்க நாம் பயன்படுத்திய வேதி உரங்கள் இன்று வேளாண் நிலங்களை அழிப்பதுடன் நிற்பதில்லை; மக்கள் எளிதில் நோய்களின் பிடியில் சிக்கிவிடுவதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
இயற்கை வேளாண்மைக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த நம்மாழ்வார், நெல் ஜெயராமன் இருவரும் இல்லாத சூழலில், ஜூன் 8,9 தேதிகளில் 13-வது தேசிய நெல் திருவிழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
ஜெயராமன் எனும் களஞ்சியம்
மரபு நெல் வகைகளைச் சேமிப்பதன் மூலம் இயற்கை வேளாண்மைக்குப் புத்துணர்வு அளித்தவர் நெல் ஜெயராமன், இது அவர் இல்லாமல் நடைபெறும் முதல் தேசிய நெல் திருவிழா.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும், நெல் ஜெயராமன் ஆற்றிய பணிகள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதே நெல் ஜெயராமன் இல்லாத வெறுமையை போக்கியது. அவரது பெரும் முயற்சியை அங்கீகரிக்கும் விதமாகத் தமிழ்நாடு அரசு, அவரது வாழ்க்கைக் குறிப்பைப் பாடத்திட்டத்திலும் இடம்பெறச் செய்துள்ளது.
மருந்தாகும் பாரம்பரிய நெல்
இந்தத் திருவிழாவில் மரபு நெல் சாகுபடி குறித்து முறையான வழிகாட்டுதலை எதிர்நோக்கியுள்ள உழவர்களுக்கு, வேளாண் வல்லுநர்கள் வழங்கிய ஆலோசனைகள் ஊக்கத்தைத் தந்தன.
சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அநேகர் அரிசி உணவை உட்கொள்கிறார்கள். குறிப்பாகத் தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகத்தில் அரிசி உணவை உட்கொள்பவர்கள் அதிகம்.
உலகில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் பேரளவு இந்தியாவில் உள்ளனர். அதில் பெரும்பாலோர் தென் மாநிலங்களில் இருக்கிறார்கள். அனைவரும் அரிசி உணவு உட்கொண்டு பழகியவர்கள். இவர்களுக்கு மரபு நெல் ரகங்களில் கருங்குறுவை, கறுப்புக் கவுனி ஆகிய நெல் ரகங்கள் ஏற்ற உணவு.
பொன்னி போன்ற அரிசி வகைகளை உண்ணும்போது நமது உடலில் உணவு சர்க்கரையாக மாறும் திறன் (glycaemic index) 80 ஜிஐ, அதேவேளை இனிப்பான தின்பண்டங்கள் உட்கொள்ளும்போது அதன் அளவு 75 ஜிஐதான். எனவேதான்,
குறைந்த அளவு ஜிஐ உள்ள கோதுமை, ஓட்ஸ் போன்றவை பரிந்துரை செய்யப்படுகின்றன. ஆனால், தமிழர்களின் மரபு நெல் ரகமான கருங்குறுவையில் 53, கறுப்புக் கவுனியில் 52 மட்டுமே ஜிஐ உள்ளது.
சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை உண்ணக் கூடாது என்ற வாதம் உண்டு. இது மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ள இந்தக் காலகட்டத்தில், இந்த இரு அரிசி வகைகளை அறிமுகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அப்படிச் செய்தால் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு லாபகரமான விலையையும் நுகர்வோருக்கு ஆரோக்கியத்தையும் ஒரு சேர வழங்க முடியும். தேசிய நெல் திருவிழா உழவர்களிடம் இதைத் தீர்க்கமாக முன்வைத்துள்ளது.
மதிப்புக்கூட்டினால் லாபம் அதிகம்
இந்தக் கருத்தை முன்வைத்துப் பேசிய இந்திய உணவுப் பயிர் பதனிட்டுக் கழக இயக்குநர் சி.ஆனந்தகிருஷ்ணனிடம் பேசியபோது, அவர் கூறியது: ஓர் உணவுப்பொருள் நுகர்வோருக்குப் பிடிக்க வேண்டும் என்றால் சுவை, மணம், நிறம் ஆகிய மூன்றும் நன்றாக இருப்பது அவசியம். மரபு நெல் சாகுபடியில் விளைவிக்கிற நெல் ரகங்கள் கறுப்பு,சிவப்பு, பழுப்பு நிறத்தில் இருக்கும். வெள்ளை அரிசியாக உண்பவர்களுக்கு இந்த நிறம் சற்று வெறுப்பைத் தரும்.
அதனால் இந்த அரிசியை விற்பனை செய்வதில் உள்ள பின்னடைவு கருதியே, உழவர்கள் பலரும் மரபு நெல் சாகுபடி செய்யத் தயங்குகின்றனர். உழவர்கள் தாங்கள் விளைவிக்கும் அரிசியை மதிப்புக்கூட்டி விற்பதே இதற்குத் தீர்வு.
இதற்குத் தஞ்சையில் உள்ள இந்திய உணவுப் பயிர் பதனிட்டுக் கழகம், உழவர்களுக்கு உதவுகிறது. அங்குள்ள அரவை ஆலையில் தங்களுடைய அரிசியை வெள்ளையாக்கிட (பாலீஸ்) மின் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.
மேலும், அரிசியை அப்படியே விற்காமல் பிஸ்கட்டுகளாக, சேமியாவாக அல்லது இன்னபிற பொருட்களாக மதிப்புக்கூட்டி விற்றால் இரண்டு மடங்கு லாபம் பெறலாம். இதற்குரிய பயிற்சியும் இலவசமாக வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மரபுப் பெருமரம்
இரண்டு நாட்கள் நடைபெற்ற நெல் திருவிழாவை கிரியேட் அமைப்பு நடத்தியது. தமிழகம், கேரளம் உட்பட பல பகுதிகளிலிருந்து உழவர்கள், சூழலியல் ஆர்வலர்கள் இந்தத் திருவிழாவில் பங்கேற்றனர்.
மரபு நெல் சாகுபடியை உயர்த்திப் பிடிக்கத் திரண்டவர்களின் இந்தப் பெருங்கூட்டத்தைப் பார்க்கும்போது, நம்மாழ்வாரும் நெல் ஜெயராமனும் மக்களின் உள்ளத்தில் விதைத்த மரபு நெல் விதைகள் நெற்கதிர்களாக அல்ல, பெருமரம் போலவே வளர்ந்துவிட்டதை உணர முடிகிறது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
3 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
5 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
6 days ago
சுற்றுச்சூழல்
9 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
11 days ago
சுற்றுச்சூழல்
12 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
16 days ago
சுற்றுச்சூழல்
18 days ago
சுற்றுச்சூழல்
23 days ago
சுற்றுச்சூழல்
25 days ago